NATIONAL

காற்று மாசுக் குறியீடு (ஏபிஐ) 100ஐத் தாண்டினால் வகுப்பறைக்கு வெளியே நடத்தப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்

ஷா ஆலம், அக் 3: காற்று மாசுக் குறியீடு (ஏபிஐ) 100ஐத் தாண்டினால் வகுப்பறைக்கு வெளியே நடத்தப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிகள் நிறுத்த வேண்டும் என்று மலேசிய கல்வி அமைச்சகம் (கேபிஎம்) தெரிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த பொது நடவடிக்கைகள் அல்லது வெளிப்புற விளையாட்டுகளை ஒத்திவைக்க அமைச்சகம் பரிந்துரைக்கிறது.

காற்று மாசுக் குறியீடு அளவீடுகள் 200க்கு மேல் இருக்கும் பகுதிகள் அல்லது மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சகம் விளக்கியது.

“காற்று மாசுக் குறியீடு அளவீடுகள் 200க்குக் கீழே குறையும் போக்கை காட்டினால், பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கலாம்” என்று முகநூலில் பகிரப்பட்ட வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்படாவிட்டால், பள்ளி மூடப்படும் போது ஆசிரியர்கள் உரிய பணிகளை மேற்கொள்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்தது.

காற்று மாசுக் குறியீடு அளவீடுகள் 500ஐத் தாண்டினால், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை என்று அமைச்சகம் விளக்கியது.

“பள்ளிகள் தங்கள் பகுதிகளில் அல்லது மாவட்டங்களில் ஏற்படும் முகைமூட்டம் தொடர்பாக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை எப்போதும் அறிந்திருக்க வேண்டும். இதனால் உரிய நடவடிக்கைகள் எடுப்பது எளிது“.

மாணவர்கள் முகக்கவரி அணிவதையும் அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் கல்வி அமைச்சு அறிவுறுத்துகிறது. அதே நேரத்தில் தங்கள் குழந்தைகளின் உடல்நலம் குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம், ஆனால் பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும்.

பொது தேர்வுகள் உட்பட அனைத்து வகை தேர்வுகளும் தொடர வேண்டும்,” என்றும் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :