SELANGOR

பத்தாங் காலி நிலச்சரிவு அறிக்கையை பகிரங்கப்படுத்த மாநில அரசு இணக்கம்

ஷா ஆலம், அக் 6- பத்தாங் காலி, ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம்
பொழுதுபோக்கு மையத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட
நிலச்சரிவு தொடர்பான முழு அறிக்கையை பகிரங்கப்படுத்த சிலாங்கூர்
அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்று நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல்
வழங்கப்பட்ட வேளையில் விசாரணை அறிக்கை நட்மா எனப்படும் தேசிய
பேரிடர் மேலாண்மை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று மந்திரி
பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த அறிக்கையை நட்மா வெளியிடலாம் அல்லது தனது அகப்பக்கத்தில்
பதிவேற்றலாம் அல்லது தேவைப்படும் தரப்பினரிடம் வழங்கலாம். அந்த
அறிக்கை மிகவும் நுட்மானது. அனைவரும் பார்வையிடும் வகையில் அது
நட்மாவின் அகப்பக்கத்தில் வெளியிடப்படும் என அவர் சொன்னார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் அனைத்து தரப்பினரும் நடவடிக்கை
எடுக்க முடியும். மிகவும் நுட்பமான அந்த அறிக்கையில் எவ்வாறு அந்த
நிலச்சரிவு ஏற்பட்டது என்று விவரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

கிள்ளான், பூலாவ் இண்டாவில் விநியோக மையத்தை அமைப்பது
தொடர்பில் டைசோ மலேசியா, கஜிமா (மலேசியா) மற்றும் சன்வே
கன்ஸ்ட்ராஷன் சென். பெர்ஹாட் நிறுவனத்திற்கும் இடையே நேற்று
இங்கு நடைபெற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகும் சடங்கை பார்வையிட்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த பொழுது போக்கு தங்குமிட மையத்தின் உரிமையாளரின் விபரங்கள்
மற்றும் அருகிலுள்ள வன இலாகா மற்றும் சாலை ரிசர்வ் நிலங்கள்
பற்றிய தகவல்களையும் அந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது என்றார்
அவர்.

பத்தாங் காலி- கெந்திங் சாலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 12ஆம்
தேதி நிகழ்ந்த இந்த நிலச்சரிவு சம்பவத்தில் சிறார்கள் உள்பட 31 பேர்
உயிரிழந்தனர்.


Pengarang :