SELANGOR

வெள்ளம் அபாயம் உள்ள 2,594 இடங்கள்- ஏ.பி.எம். அடையாளம் கண்டது

காஜாங், அக் 6- ஆண்டு இறுதியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் மழை
காலத்தின் போது வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ள 52,594 இடங்களை
மலேசிய பொது தற்காப்புப் படை (ஏ.பி.எம்.) அடையாளம் கண்டுள்ளது.
கடந்தாண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட
வெள்ளத்தின் போது பாதிப்புக்குள்ளான இடங்களின் அடிப்படையில் இந்த
தரவு வெளியிடப்படுவதாக ஏ.பி.எம்.மின் தலைமை ஆணையர் டத்தோ
அமினுரஹிம் முகமது கூறினார்.

இதன் அடிப்படையில் வழக்கத்திற்கு மாறான வானிலை மற்றும்
தொடர்ச்சியான மழை போன்ற சூழல்கள் ஏற்படும் பட்சத்தில் இடைவிடாத
கண்காணிப்பு நடவடிக்கைகளை தமது தரப்பு மேற்கொள்ளும் என்று அவர்
தெரிவித்தார்.

ஏ.பி.எம். எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்தோடு தேவை
ஏற்படும் பட்சத்தில் உடனடியாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அனைத்து
சாதனங்களும் நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
என்று அவர் குறிப்பிட்டார்.

பொது தற்காப்புப் படையிடம் உள்ள இயந்திரங்களுடன் கூடிய 753
படகுகளும் நான்கு சக்கர இயக்க வாகனங்கள், ஆம்புலன்ஸ், லோரி
உள்ளிட்ட 481 வாகனங்களும் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக
முழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

வரும் நவம்பர் மாதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு
பருவமழையையின் போது களத்தில் இறங்கி பணியாற்றுவதற்காக நாடு
முழுவதும் உள்ள 10,510 ஏ.பி.எம். அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு
உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.

அனைத்து ஏ.பி.எம். உறுப்பினர்களுக்கும் விடுமுறை ரத்து
செய்யப்பட்டுள்ளது. அவசர மற்றும் எதிர்பாராத சூழல்களில் மட்டும்
சம்பந்தப்பட்டவர்களுக்கு தளர்வு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.


Pengarang :