MEDIA STATEMENTNATIONAL

மாநில திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் “சமநிலை“ பட்ஜெட்- மந்திரி புசார் வரவேற்பு

கோலாலம்பூர், அக் 14- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தாக்கல் செய்த 2024 வரவு செலவுத் திட்டம் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் வகையில் சமநிலையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது எனத் தாம் நம்புவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மானியங்கள் மற்றும் நிதி உதவி உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் சமுதாயத்தின் அனைத்து நிலையிலான மக்களும் மேம்பாட்டிலிருந்து விடுபடாமலிருப்தை உறுதி செய்யும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இது தவிர, அரசாங்கம் அறிவித்துள்ள பல்வேறு திட்டங்கள் வழி சிலாங்கூர் அரசு உள்பட பல்வேறு துறைகள் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டுவதற்கான சமநிலை பட்ஜெட் இது என நான் கருதுகிறேன். சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கு உதவும் திட்டங்கள் இதில் உள்ளன. மானியத் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன. ஏழைகளுக்கு உதவி, தொழில்திறன் கல்வி மற்றும் பயிற்சி, பள்ளிகளில் உயர் கல்வி, புற நகர்  மேம்பாடு என பல்வேறு அனுகூலங்கள் இதில் அடங்கியுள்ளன என்றார் அவர்.

அதே சமயம், சுங்கை லங்காட் இரண்டாம் கட்ட வெள்ளத் தணிப்புத் திட்டம் மற்றும் கேரித் தீவு மேம்பாடு போன்றத் திட்டங்கள் சிலாங்கூரின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் தாக்கல் செய்தப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.


Pengarang :