NATIONAL

விவாதங்களைச் சொந்தமாக நேரடி ஒளிபரப்பு செய்ய எம்.பி.க்களுக்குத் தடை

கோலாலம்பூர், அக் 16- மக்களவையில் நடைபெறும் விவாதங்களை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மின்னியல் சாதனங்களைப் பயன்படுத்தி
நேரடி ஒளிபரப்பு செய்ய சபாநாயகர் தடை விதித்துள்ளார்.

இத்தகைய நேரடி ஒளிபரப்புகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் தங்கள் கவனத்தை சபாநாயகர் பக்கம் அல்லாமல் நேரடி
ஒளிபரப்புகளில் கவனம் செலுத்துவதைத் தாம் கண்டறிந்துள்ளதாக டான்ஸ்ரீ
ஜோஹாரி அப்துல் கூறினார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கைப்பேசி போன்ற சாதனங்களை மேசை மீது வைத்து தங்கள் உரையை
நேரடியாக ஒளிபரப்பு செய்யும் போக்கு அண்மைய காலமாக அதிகரித்து
வருகிறது.

இது மரியாதைக்குரிய செயல் அல்ல என்பதோடு நாடாளுமன்ற உருவாக்க
ஒழுங்கு முறைக்கும் முரணானது. இது தவிர, நாடாளுன்ற உறுப்பினரின்
எந்தவொரு உரையும் சபாநாயகரை நோக்கியே இருக்க வேண்டும் என்று
நிரந்தர விதியின் 35(1)வது பிரிவு கூறுகிறது என்று அவர் தெரிவித்தார்.

சபாநாயகரை நோக்கி அல்லாமல் தங்கள் கைபேசியை பார்த்தவாறு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுவது நாடாளுமன்ற விதிகளுக்கு
முரணானதாகும் என்றும் அவர் சொன்னார்.

ஆகவே, விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய
அவையில் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் எந்த சாதனங்களையும்
பயன்படுத்தி ஒளிபரப்பு செய்ய அனுமதிப்பதில்லை என்ற முடிவினை
எடுத்துள்ளேன் என்றார் அவர்.

தங்கள் வாதங்களை பதிவு செய்ய விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆர்.டி.எம். அல்லது நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அகப்பக்கத்திலிருந்து தங்களுக்குத் தேவையான பகுதியை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :