ANTARABANGSA

காஸாவில் சிவிலியன்களுக்குப் பாதுகாப்பான இடம் எங்கும் இல்லை- எம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறுகிறது

இஸ்தான்புல், அக் 16- இஸ்ரேலியத் தாக்குதல்களிலிருந்து பொது மக்கள்
பாதுகாப்பாக இருப்பதற்கான உத்தரவாதத்தைத் தரக்கூடிய ஒரு இடம் கூட
காஸா பகுதியில் கிடையாது என்று அனைத்துலக மனித உரிமை
அமைப்பான எம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறியது.

பாதுகாப்பான தடத்தில் வெளியேறும் சிவிலியன்கள் மீது குறி வைப்பது
காஸாவில் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பான இடம் என ஒன்றுகூட
கிடையாது என்ற கோரமான உண்மையை உணர்த்துவதாக உள்ளது என
அந்த அமைப்பு தெரிவித்தது.

கடந்த 13ஆம் தேதி சாலா-அல் டீன் சாலை நெடுகிலும் அப்பாவி
மக்களுக்கு ஏற்பட்ட உயிருடற்சேதங்கள் தொடர்பான ஆறு
காணொளிகளை எம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஆய்வு செய்தது.

வடக்குகாஸா பகுதியிலிருந்து வெளியேறும்படி பொதுமக்களுக்கு
உத்தரவிட்டிருந்த இஸ்ரேல், அவர்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக
இஸ்ரேலிய இராணுவம் ஏற்படுத்திக் கொடுத்த பாதுகாப்பான வழிதான்
தாக்குதலுக்கு உள்ளான அந்த சாலையாகும் என்று அந்த அமைப்பு தனது
எக்ஸ் பதிவில் குறிப்பிட்டது.

இராணுவம் ஏற்படுத்திக் கொடுத்த அந்த பாதுகாப்பான வழியில் சென்ற
பெண்கள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 70 பேர் இஸ்ரேலிய
தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

சுமார் முப்பது பேரை ஏற்றியிருந்த டிரக் மற்றும் எட்டு கார்களை
முதலாவது தாக்குதல் இலக்காகக் கொண்டிருந்தது. காயமுற்றவர்களைக்
காப்பாற்றுவதற்காக வந்த ஆம்புலன்ஸ் வண்டிகள் மீதும் இரண்டாவது
தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் மீட்புப் பணியாளர்கள்
காயமுற்றனர் என்று அந்த அமைப்பின் மேலும் கூறியது.

கடந்த 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,670 பேராக அதிகரித்துள்ளதாகப்
பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.


Pengarang :