NATIONAL

அலுவலகங்களில் மின்சாரத்தைச் சேமியுங்கள்- அரசு ஊழியர்களுக்குப் பிரதமர் வேண்டுகோள்

புத்ராஜெயா, அக் 16 – அரசாங்க அலுவலகங்களில் மின்சாரத்தைச்
சேமிக்கும் அதேவைளையில் சிறிய விஷயங்களில்கூட வீண் விரயத்தை
தவிர்ப்பதைக் கலாசாரமாக்கிக் கொள்ளும்படி அரசு ஊழியர்களை பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

வீண் விரயத்தை நாம் எப்போதும் பெரிய கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்.
ஆனால் நமது அலுவலகங்களில் எவ்வாறு மின்சாரத்தைப்
பயன்படுத்துகிறோம் என்பதைக் கவனிக்க தவறிவிடுகிறோம். இந்த
விஷயம் மேம்படுத்தப்பட வேண்டும். இவை மக்களின் பணமாகும் என்றார்
அவர்.

இதனை நாம் இப்போது தொடங்கி கலாசாரமாக்கிக் கொள்ள வேண்டும்
என நான் விரும்புகிறேன். சேமிப்புத் திட்டங்களை அமல்படுத்தினால்
நிறைய விஷயங்களை நாம் செய்ய இயலும் என்று இன்று பிரதமர்
துறையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர்
சொன்னார்.

கடந்த 1990 ஆம் ஆண்டில் தாம் நிதியமைச்சராக இருந்த போது தனது
அலுவலகத்தில் மின்சார சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாக
அவர் தெரிவித்தார்.

ஜாலான் டூத்தாவிலுள்ள நிதியமைச்சில் நான் பணியாற்றிய காலத்தில்
திறந்த வெளியில் ஒன்று கூடல் நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கும்
போது கட்டிடத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்.

விளக்குகளை அணைக்கும்படி அனைத்து துறைத் தலைவர்களையும் நான்
கேட்டுக் கொள்ளவிருக்கிறேன். நீங்கள் ஒரு மணி நேரம் வெளியில்
இருக்கும் போது எதற்காக விளக்குகள் எரிய வேண்டும். அது உங்கள்
பணமல்ல. மக்களின் பணம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :