NATIONAL

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு, சிறைச்சாலை நெரிசல் மீது இன்றைய மக்களவையில் விவாதம்

கோலாலம்பூர், அக் 17- வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு,
சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் மற்றும் கிழக்குக் கரை இரயில்
திட்ட (இ.சி.ஆர்.எல்.) மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய
மக்களவைக் கூட்டத்தில் முக்கிய இடத்தைப் பெறும்.

இன்றைய அமைச்சர் கேள்வி நேரத்தின் போது வாழ்க்கைச் செலவின
அதிகரிப்பு தொடர்பான கேள்வியை உலு திரங்கானு தொகுதி
பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ ரோசோல் வாஹிட் பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் எழுப்புவார் என்று நாடாளுமன்ற
அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ள இன்றைய கூட்ட நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

கோழி மற்றும் முட்டை விலையைச் சந்தை நிலவரத்திற்கேற்ப
நிர்ணயிக்கும் முடிவினால் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் மக்கள்
அவதியுற்று வரும் மக்களுக்கு எந்த சுமையையும் ஏற்படாது என்ற
உத்தரவாதம் குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர்
கேட்டுக் கொள்வார்.

வாய்மொழிக் கேள்வி அங்கத்தின் போது, சிறைச்சாலைகளில் கைதிகளின்
எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் முன்னாள் கைதிகள் மீண்டும் குற்றச்
செயல்களில் ஈடுபடாமலிருப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு உதவக்கூடிய
திட்டங்கள் குறித்து மஸ்ஜிட் தானா தொகுதி பெரிக்கத்தான் நேஷனல்
உறுப்பினர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கேள்வியெழுப்புவார்.

இ.சி.ஆர்.எல். திட்டத்தின் ஆகக்கடைசி மேம்பாடு, இத்திட்டத்தில் பங்கு
கொண்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின்
எண்ணிக்கை மற்றும் இத்திட்டத்திற்கு உண்டான கூடுதல்
நிதிச்செலவினம் குறித்து குவாந்தான் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல்
உறுப்பினர் வான் ரசாலி வான் நோர் வினா தொடுப்பார்.

இதனிடையே, எச்.பி.வி. தடுப்பூசி கொள்முதல், வாங்கப்படும் தடுப்பூசியின்
ரகம் மற்றும் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் போது விடுபட்டவர்கள்
உரிய தடுப்பூசிகளைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
குறித்து சுகாதார அமைச்சரிடம் பண்டார் கூச்சிங் பக்கத்தான் ஹராப்பான்
உறுப்பினர் டாக்டர் கெல்வின் லீ உவேன் வினவுவார்.


Pengarang :