SELANGOR

பிளஸ் நெடுஞ்சாலை நெடுகிலும் இருந்த 23 சட்டவிரோத விளம்பரப் பலகைகளை எம்.பி.எச்.எஸ். அகற்றியது

ஷா ஆலம், அக் 20- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை நெடுகிலும் இருந்த 23
சட்டவிரோத விளம்பரப் பலகைகளை உலு சிலாங்கூர் நகராண்மைக்
கழகம் அகற்றியது.

இம்மாதம் 10ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கையில் அந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டதாக
நகராண்மை கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

அந்த விளம்பரப் பலகைகளை 30 நாட்களுக்குள் அகற்றும்படி விதிக்கப்பட்ட
உத்தரவை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் பின்பற்றாததைத்
தொடர்ந்து காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலான இந்த
ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அது
தெரிவித்தது.

உலு சிலாலங்கூர் நகராண்மைக் கழகத்தின் 1974ஆம் ஆண்டு
சாலை,வடிகால் மற்றும கட்டிடச் சட்டத்தின் (சட்டம் 133) 72(6) பிரிவின்
கீழ் நகராண்மைக் கழகத்தின் கட்டிடத் துறை மற்றும் அமலாக்கத்
துறையினர் பிளஸ் நிறுவனம் மற்றும் நியமிக்கப்பட்ட குத்தகையாளரின்
ஒத்துழைப்புடன் அந்த விளம்பரப் பலகைகளை அகற்றினர்.

உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் விளம்பர நிறுவனங்களுக்கு எதிராக
இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று
நகராண்மைக் கழகம் கூறியது.


Pengarang :