NATIONAL

பேராக் மாநிலத்தில் 277 பேர் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

ஈப்போ, அக் 26 – பேராக் மாநிலத்தில் நேற்றிரவு 10.00 மணி நிலவரப்படி 88
குடும்பங்களைச் சேர்ந்த 277 பேர் மூன்று வெள்ள துயர் துடைப்பு
மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்று காலை 77
குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் மட்டுமே இம்மையங்களில்
தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடாங் தேம்பாக், சமூக மண்டபத்தில் உள்ள தற்காலிக நிவாரண
மையத்தில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 186 பேர் தங்கியுள்ளதாகப் பேராக்
மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் கூறியது.

கம்போங் கிளாங் கச்சாங் மற்றும் கம்போங் பத்து 9 ஆகிய கிராமங்களைச்
சேர்ந்த 22 குடும்பங்களை உள்ளடக்கிய 58 பேர் லங்காப்பில் உள்ள தெலுக்
இந்தான் நகராண்மைக் கழக மண்டபத்தில் அடைக்கலம் நாடியுள்ளதாக
அது தெரிவித்தது.

கம்போங் மாத்தாங் தெங்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எழு
குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் சங்காட் லோபாக் தேசிய பள்ளியில்
தங்கியுள்ளனர்.

இதனிடையே, பீடோர் ஆற்றில் நீர் மட்டம் தொடர்ந்து அபாயக் கட்டத்தில்
அதாவது 3.97 மீட்டராக உள்ளதாக அச்செயலகம் தெரிவித்தது. நேற்று
காலை இதன் அளவு 4.11 மீட்டராக இருந்தது.


Pengarang :