மாநிலத்திலுள்ள இந்திய சமூகத்தினரின் நலன் தொடர்ந்து காக்கப் படும்- தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மந்திரி புசார் உறுதி

ஷா ஆலம் நவ 7- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்தின் நலன் தொடர்ந்து காக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதியளித்துள்ளார்.

 இந்திய சமூகத்தின் மத்தியில் போட்டியிடும் ஆற்றலை அதிகரிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மாநில அரசு உணர்ந்துள்ளது, இம் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட விருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் இம்மாதம் 10ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில்  இந்திய சமூகத்தின் நலன் தொடர்ந்து தாக்கப்படுவதை உறுதி செய்யக்கூடிய கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்படும் என அவர் சொன்னார்.

“வணக்கம், என் பெயர் அமிருடின். என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்“ எனத் தொடங்கும் இந்த வாழ்த்துச் செய்தியில் சிலாங்கூர் மற்றும் நாடு முழுவதும் உள்ள இந்துகள் மற்றும் சீக்கியர்களுக்கு தனது தீபத்திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அமிருடின் குறிப்பிட்டார்.

தீபத் திருநாளைக் கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகளில் பரபரப்பாக ஈடுபட்டு வரும் இந்திய சமூகத்தினரின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன்.

தொழில் முனைவோர் துறையில் இந்தியர்களின் போட்டித் திறனை அதிகரிப்பதற்கு ஏதுவாக ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா மூலம் 400 பேருக்கு அவர்களின் வர்த்தகத் தேவைக்கு ஏற்ற உபகரணங்களை வழங்கி உதவியுள்ளோம்.

இது தவிர, யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்தின் வாயிலாக அடிக்கடி நடத்தப்படும் பயிற்சிகளிலும் இந்த தொழில் முனைவோர் பங்கு கொள்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை தற்காலிகமாக  அல்லாமல் நீண்ட கால அடிப்படையில் மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

அனைத்துலக அரங்கில் போட்டியிடக்கூடிய இளம் தலைமுறையினரை உருவாக்க கல்வி முக்கிய அடித்தளமாக விளங்குவதை மாநில அரசு உணர்ந்துள்ளது.

இதன் அடிப்படையில் மாநிலத்திலுள்ள 97 தமிழ்ப் பள்ளிகளுக்கும் வருடாந்திர மானியமாக 50 லட்சம் வெள்ளியை மாநில அரசு ஒதுக்கி வருகிறது.

மாணவர்கள் வசதியாக சுற்றுச் சூழலில் கல்வி கற்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக மூன்று மாதங்களுக்கு முன்னர் மிட்லண்ட்ஸ் தோட்ட தமிழப்ப்ள்ளியின் மாணவர் தங்கும் விடுதிக்கு 300,000 வெள்ளி மானியம் வழங்கினேன்.

இந்திய சமூகத்தின் நலன் தொடர்ந்து காக்கப் படுவதை உறுதி செய்யக்கூடிய திட்டங்களும் உண்டு என்று அமிருடின் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் .கூறினார்.


Pengarang :