NATIONAL

குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஓர் ஆணையத்தை உருவாக்க எண்ணம்

கோலாலம்பூர், நவ 20 – குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை மேம்படுத்துவதற்கு பொறுப்பான ஓர் ஆணையத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மலேசிய குழந்தைகள் ஆணைய மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இதை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடர் நவம்பர் 30-ம் தேதி முடிவடைவதற்குள் இந்த மசோதாவின் முதல் வாசிப்பு நடத்தப்படும் என்று நம்பிக்கை இருப்பதாகப் பிரதமர் துறையின் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸலினா ஓத்மான் கூறினார்.

மலேசிய மனித உரிமைகள் ஆணைய சட்டம் 1999 இல் திருத்தம் செய்யப்படுவதோடு, மலேசிய குழந்தைகள் ஆணைய மசோதாவும் சமர்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

“சப்ளை பில் 2024 ஐ நாங்கள் முடித்தவுடன், மற்ற மசோதாக்களை தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாட்கள் இருக்கும், எனவே இந்த அமர்வின் போது, குறைந்தபட்சம் முதல் வாசிப்புக்காக இந்த மசோதாவை தாக்கல் செய்ய முயற்சிப்போம்.

“இருப்பினும், இப்போதைக்கு, விநியோக மசோதாவை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவோம்,” என்று அவர் உலக குழந்தைகள் தினம் 2023 கொண்டாட்டத்தை முன்னிட்டு உலக குழந்தைகள் தினக் கண்காட்சியைப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

அதே நேரத்தில், மக்களவை மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டிற்கும் கொண்டு வரப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான விஷயங்களில் அனைத்து தரப்பினரும் ஒன்று படுவார்கள் என்றும் அஸலினா நம்பிக்கை தெரிவித்தார்.

“பாதிக்கப்படக்கூடிய குழுவின், குறிப்பாகப் குழந்தைகளின் பிரச்சனைகள், இரு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் யதார்த்தமாக்கப் பட வேண்டும் என்று நான் எதிர்ப் பார்க்கின்றேன். குழந்தைகளுக்காக நீங்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :