SELANGOR

சுபாங் ஜெயா டத்தோ பண்டார் கிண்ண கபடி போட்டியில் 18 குழுக்கள் பங்கேற்பு

சுபாங் ஜெயா, டிச 5- சுபாங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார் கிண்ண கபடி போட்டி கடந்த வாரம் இங்குள்ள செர்டாங் ஜெயா எம்.பி.எஸ்.ஜே. அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
.
சிலாங்கூர் மாநில கபடிச் சங்கத்தின் ஆதரவுடன் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டியை சுபாங் ஜெயா துணை டத்தோ பண்டார் ஜூல்கர்னாய்ன் சே அலி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் விளையாட்டை நிறைவு செய்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

சிலாங்கூர் மாநில நிலையிலான இந்தப் போட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கென இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 12 குழுக்களும் பெண்கள் பிரிவில் 6 குழுக்களும் பங்கேற்றதாக சிலாங்கூர் மாநில கபடிச் சங்கத்தின் உதவித் தலைவர் முனைவர் கு. ராமன் கூறினார்.

ஆண்கள் பிரிவில் 85 கிலோவுக்கும் குறைவான எடை கொண்டவர்களும் பெண்கள் பிரிவில் 75 கிலோவுக்கும் குறைவான எடை கொண்டவர்களும் இப்போட்டியில் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில்  செமினி ‘ஏ‘ கபடிக் குழு முதலிடத்தையும் பூச்சோங் ‘ஏ’ குழு இரண்டாம் இடத்தையும் பத்து கேவ்ஸ் மற்றும் சீத்தா ரைடர்ஸ் குழுக்கள் கூட்டாக மூன்றாம் இடத்தையும் பெற்ற வேளையில் பெண்கள் பிரிவில் சிப்பாங், சீத்தா ரைடர்ஸ்  குழு முதலிடமும் பெட்டாலிங் கபடிக் குழு இரண்டாம் இடத்தையும்  கோல லங்காட் மற்றும் செமினி குழுக்கள் கூட்டாக மூன்றாம் இடத்தையும் பெற்றன என்றார் அவர்.

இப்போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற இரு பிரிவுகளையும் சேர்ந்த குழுக்களுக்குத் தலா 1,500 வெள்ளி பரிசும் இரண்டாம் இடம் பெற்ற குழுக்களுக்கு தலா 1,000 வெள்ளி பரிசும் வழங்கப்பட்டன. மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தைப் பிடித்த குழுக்களுக்கு தலா 500 வெள்ளி வழங்கப்பட்டது என ராமன் குறிப்பிட்டார்.
.
ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர் இ.மேகநாதனின் அரிய முயற்சியின் வாயிலாக இந்த போட்டி மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :