MEDIA STATEMENTNATIONAL

சந்தேக நபர்களின் காரை 50 கிலோமீட்டர்  தூரம் துரத்திய 28 போலீஸ் ரோந்துக் கார்கள்

கோலாலம்பூர், டிச 6- சாலைத் தடுப்பை மீறிச் சென்ற கார் ஒன்றை இருபதுக்கும் மேற்பட்ட போலீஸ் ரோந்துக் கார்கள் 50 கிலோ மீட்டர் வரை துரத்திச் சென்ற பரபரப்பான சம்பவம் நேற்று சைபர் ஜெயாவில் நிகழ்ந்தது.

அந்த பெரேடுவா பேஸ்ஸா ரகக் காரை ஓட்டிய 27 வயது ஆடவனும் அதில் பயணம் செய்த 21 வயது பெண்ணும் இறுதியாக சிப்பாங், தாமான் தாசேக் சைபர்ஜெயா சாலை சுற்றுவட்டத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

நேற்று அதிகாலை 1.42 மணியளவில் நிகழ்ந்த இந்த துரத்தல் நடவடிக்கையில் சிப்பாங், செர்டாங், சுபாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா ஆகிய நான்கு மாவட்ட போலீஸ் தலைமையகங்களைச் சேர்ந்த 28 ரோந்துக் கார்கள் சம்பந்தப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஃபாக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

இச்சம்பவத்தின் போது சந்தேகப் பேர்வழியின் காரை தடுத்து நிறுத்த முயன்ற மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் காயங்களுக்குள்ளானதாக அவர் சொன்னார்.

சந்தேக நபரின் காரை சோதனையிட்ட போலீசார் அதிலிருந்து கத்தி, கத்தரிக்கோல், ஒரு ஜோடி கையுறை, ஒரு கவசத் தொப்பி, ஒரு அடையாளக் கார்டு, நான்கு கிரடிட் கார்டுகளைக் கண்டு பிடித்தனர் என்றார் அவர்.

கைதான அந்த சந்தேக நபருக்கு 11 குற்றப்பதிவுகள் உள்ளது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். குற்றச் செயல் தொடர்பில் ஆறு குற்றப்பதிவுகளையும் போதைப் பொருள் தொடர்பில் நான்கு பதிவுகளையும் ஆயுதம் ஏந்தி கூட்டாக கொள்ளையிட்டது தொடர்பில் ஒரு குற்றப்பதிவும் அந்நபருக்கு உள்ளது. கைதான அந்த  பெண் எந்த குற்றப்பதிவையும் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :