NATIONAL

வறுமை, பழுதடைந்த பள்ளிகள் பிரச்சனைக்கு அரசாங்கம் தொடர்ந்து தீர்வு காணும்- அன்வார் உறுதி

பெனாம்பாங், டிச. 8 – வறுமை, பழுடைந்த பள்ளிகள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஒற்றுமை அரசாங்கம் அடுத்த ஆண்டு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இனம், மதம் உள்ளிட்ட  பல்வேறு பின்னணிகளைக்  கொண்ட  மக்கள் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த இவ்விவகாரங்கள் மீது கவனம் செலுத்துவது முக்கியம் என்று அவர் சொன்னார்.

பரம ஏழ்மை  இன்னும் ஒரு பிரச்சனையாக இருப்பதால் முதலில் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படைப் பிரச்சனைகளில் அதுவும் ஒன்றாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

இறைவன் அருளால்  டிசம்பர் மாத நிலவரப்படி, இந்தப் பிரச்சனையை நாம் கிட்டத்தட்ட சமாளித்துவிட்டோம். இன்னும் பல ஏழைகள் இருக்கிறார்கள். அதாவது பரம ஏழைகள். அமைச்சுகள்,அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள், மாநில அரசுகள், மாவட்டங்கள் மற்றும் முக்கிம்களிடையிலான  ஒருமித்த கருத்து மற்றும் ஒத்துழைப்பின் காரணமாக இதை நாங்கள் தீர்க்க முடிந்தது என்று அவர் கூறினார்.

இங்குள்ள புஹாவன் சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற  தேசிய அளவிலான 2023  அங்காடி மற்றும் சிறு வியாபாரிகள்  தினத்தைத் தொடக்கி வைக்கும்  நிகழ்வில் உரையாற்றிய போது அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.

“அங்காடி மற்றும் சிறு வியாபாரிகள் மடாணி பொருளாதாரத்தின் உயிர்நாடி” என்ற கருப்பொருளிலான இந்த தினம், நாட்டில் உள்ள அங்காடி மற்றும் சிறு வியாபாரிகள் சமூகத்தை அரசாங்கம் அங்கீகரிப்பதன் அடையாளமாக ஏற்பாடு செய்யப்பட்டது.


Pengarang :