ANTARABANGSA

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு விசா விலக்களிப்பு- இந்தோனேசியா திட்டம்

ஜாகர்த்தா, டிச 8- அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்
கொரியா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாட்டுப் பிரஜைகள்
விசா இன்றி தங்கள் நாட்டிற்கு வர அனுமதிப்பது குறித்து இந்தோனேசியா
பரிசீலித்து வருகிறது.

நாட்டின் சுற்றுலாத் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் உத்வேகம்
அளிக்கும் நோக்கில் இத்திட்டத்தை அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகச்
சுற்றுலா அமைச்சர் சண்டியாகா உனோ கூறினார்.

இந்த சலுகைத் திட்டத்தில் இடம் பெறும் நாடுகளின் பட்டியலை ஒரு
மாதத்திற்குள் இறுதி செய்யும் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக
அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பொருளாதாரம், சுற்றுலா மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு
உத்வேகம் அளிப்பதற்கு ஏதுவாக விசா விலக்களிப்பு திட்டத்தை
அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி அதிபர் உத்தரவிட்டுள்ளார் என
அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் அதாவது கோவிட்-19 பெருந்தொற்றுக் முன்னர்
இந்தோனோசியாவுக்கு 1 கோடியே 60 லட்சம் சுற்றுப்பயணிகள் வருகை
புரிந்ததைத் தரவுகள் காட்டுகின்றன.

இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 94 லட்சத்து 90 ஆயிரம்
சுற்றுப்பயணிகள் அந்நாட்டிற்கு வருகை புரிந்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு
அதே காலக்கட்டத்தில் பதிவான சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையை விட
இது 124.3 விழுக்காடு அதிகமாகும்.

தென்கிழக்காசிய நாடுகளைப் பின்பற்றி விசா விலக்களிப்பை அறிமுகம்
செய்யும் ஆகக் சமீபத்திய நாடாக இந்தோனோசியா விளங்குகிறது.
சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளும் இத்தகைய விசா
தளர்வுகளை ஏற்கனவே அறிவித்துள்ளன.


Pengarang :