SELANGOR

ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கை- கவுன்சிலர் ராமு தகவல்

ஷா ஆலம், டிச 15 – நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்ட நிலையில் தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைளை ஷா ஆலம் மாநகர் மன்றம் எடுத்து வருகிறது.

வெள்ள அபாயம் மிகுந்த இப்பகுதியில் மழை காலங்களின்போது வடிகால்களில்  நீர் தேங்காமலிருப்பதை உறுதி செய்வதற்கான பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாக  மாநகர் உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.

இந்நோக்கத்திற்காக ஜாலான்  25/14இல் மூன்று நீர் இறைப்பு இயந்திரங்களும்  ஜாலான் 25/35 இல் இரண்டு நீர் இறைப்பு இயந்திரங்களும், ஜாலான் 25/39இல்  இரண்டு இயந்திரங்களும் பெர்சியாரான்  அமானில் மூன்று இயந்திரங்களும் பொருத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இதுதவிர இந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்கள் மற்றும் வடிகால்களைத் துப்புரவு செய்யும் மற்றும்  விரிவு படுத்தும் பணிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தைத் தடுப்பதற்கு ஏதுவாக உள்கட்டமைப்பு பணிகளை
மேற்கொள்வது  தவிர்த்து  வெள்ளம் தொடர்பான விழிப்புணர்வை பொது மக்கள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மாநகர் மன்றம் முன்னெடுத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் ஸ்ரீ மூடாவில் சுமார் 1,000 பேர் பங்கேற்ற மாபெரும் கூட்டுத் துப்புரவு இயக்கத்தை மாநகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. மேலும் கடந்த வாரம் ஸ்ரீ மூடாவில் உள்ள  குடியிருப்பாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் துப்பரவு இயக்கம் மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்தார்.

வெள்ள முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொள்வதில் வட்டார மக்களின் ஒத்துழைப்பை தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாக கூறிய அவர்,  குப்பைகளைக் கால்வாய்கள் உள்பட கண்ட இடங்களில் வீசுவதைத் தவிர்க்கும்படி  கேட்டுக் கொண்டார்.


Pengarang :