SELANGOR

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரும்பு தடுப்புகளைப் பொருத்தும் பணி தொடர்கிறது

ஷா ஆலம், டிச 18: ஜாலான் வாவாசான் 3/9 மற்றும் 3/14, பூச்சோங் ஆகிய நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரும்பு  தடுப்புகளை சொருகும் பணி மற்றும் சரிவுகளை சரி செய்வது இன்று காலையும் தொடர்ந்ததாக செர்டாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் கூறினார்.

இதுவரை 46 இரும்புகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று பிற்பகலும் அவ்விடத்தில் அசைவு காணப்பட்டதாக உதவி ஆணையர் ஏ.ஏ.அன்பழகன் தெரிவித்தார்.

“நேற்று மாலை 3.30 மணியளவில், தரையில் அசைவு இருப்பது கண்டறியப்பட்டது, அதாவது, சில வீடுகளின் முன்புற சிமென்ட் இடிந்து விழத் தொடங்கியது,” என்று அவர் கூறினார்.

இச்சம்பவத்தின் விளைவாக நான்கு வாகனங்கள் சேதமடைந்ததைக் குறித்து கருத்து தெரிவித்த அவர், அவற்றில் ஒன்று கிரேன் மூலம் நேற்று மாலை 6 மணியளவில் அகற்றப்பட்டது என்றார்.

இதற்கிடையில், சம்பவத்தை அவ்வப்போது காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்கும் மையம் (பிபிஎஸ்) நேற்று இரவு மூடப்பட்டதாக அன்பழகன் தெரிவித்தார்.

இந்த மண்சரிவு சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த கனமழையால் ஒன்பது வீடுகளில் இருந்த 29 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர்.


Pengarang :