NATIONAL

மலேசிய துறைமுகங்களில் இஸ்ரேலிய கப்பல்களுக்குத் தடை- உடனடியாக அமலுக்கு வருகிறது

ஷா ஆலம், டிச 20 – இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட ஸிம் எனும்
நிறுவனத்தின் கப்பல்கள் மலேசிய துறைமுகளுக்கு வருவதை
அனுமதிப்பதில்லை என அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

அந்நாட்டு கப்பல்களுக்கான தடையை உடனடியாக அமல்படுத்தவதற்கான
நடவடிக்கையைப் போக்குவரத்து அமைச்சு மேற்கொள்ளும் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக அடுக்குமுறைகளைக் கையாள்வதில்
மனிதாபிமான கோட்பாடுகளை புறக்கணித்ததோடு அனைத்துலக
சட்டங்களையும் மீறிய இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும்
விதமாக இந்த தடை விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அந்நிறுவனத்தின் கப்பல்கள் மலேசிய துறைமுகங்களுக்கு வர கடந்த
2002ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் அனுமதி வழங்கி வந்தது.

எனினும், முந்தைய அமைச்சரவையின் அனுமதியை முழுமையாக ரத்து
செய்ய நடப்பு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மேலும் இஸ்ரேலிய
கொடிகள் ஏந்திய கப்பல்களை மலேசிய துறைமுகங்களில் அணைய
அனுமதி மறுப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள் மலேசிய துறைமுகங்களில்
நின்று சரக்குகளை ஏற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று
அன்வார் அறிக்கை ஒன்றில் கூறினார்.

மலேசிய அரசாங்கத்தின் இந்நடவடிக்கை நாட்டின் வர்த்தக
நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர்
சொன்னார்.


Pengarang :