NATIONAL

தனியார் நிறுவன ஊழியர்  730,000  ரிங்கிட்டை முதலீட்டு மோசடியில் இழந்தார்

குவாந்தான், டிச.29: சமூக வலைதளம் மூலம் இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் பங்குகொண்ட ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் 730,000 ரிங்கிட்டை  முதலீட்டு மோசடியில் இழந்தார்.

பாதிக்கப்பட்ட 65 வயது பெண், இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பங்கு முதலீட்டுத் திட்டத்தில் 20 சதவீதம் லாபம் ஈட்ட முடியும் என்ற வாக்குறுதியால் ஈர்க்கப் பட்டிருந்தார் என பகாங் காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்

முதலீட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பங்குத் தளமான பிட்பாண்டா வலைத்தளத்தில் அந்தப் பெண் பதிவு செய்ததாகவும், ஏப்ரல் 20 முதல் ஜூன் 9 வரை 14 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு 19 பரிவர்த்தனைகள் வழி RM730,000 பணத்தை மாற்றியதாகவும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் தனது சேமிப்பையும், நண்பரிடமிருந்து பெற்ற கடனையும் முதலீடு செய்யப் பயன்படுத்தியுள்ளார். முதலில் அவரால் RM5,000 லாபத்தை திரும்பப் பெற முடிந்தது. பின், அச்சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரிடம் முதலீட்டிற்காகக் கூடுதல் பணம் செலுத்த சொன்னார்,” என்று யஹாயா ஓத்மான் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் நேற்று குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைமையக காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், மோசடி செய்ததற்காகக் குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் வழக்கு விசாரணை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இல்லாத முதலீட்டு சிண்டிக்கேட்டுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு, அதிக லாபத்தை உறுதியளிக்கும் முதலீடுகளால் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும் யஹாயா பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

– பெர்னாமா


Pengarang :