SELANGOR

வசதி குறைந்தவர்கள் மாநில அரசின் ‘பந்துவான் சிஹாட் சிலாங்கூர்‘ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜன 11- சுகாதாரச் சேவையைப் பெறுவதற்கான வசதியைக்
கொண்டிராத தரப்பினர் மாநில அரசின் ‘பந்துவான் சிஹாட் சிலாங்கூர்‘
(பி.பி.எஸ்.) எனப்படும் மருத்துவ உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம்
செய்யலாம்.

இம்மாதம் 2ஆம் தேதி தொடங்கி இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாகப் பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு,
விழிப்படல சிகிச்சை, சிறிய அறுவை சிகிச்சைகள், செயற்கை கால்
மற்றும் மருத்துவ உபகரணங்களை அரசாங்க மருத்துவமனைகளில் பெற
முடியும் என்று அவர் சொன்னார்.

சில நோய்களுக்கான சிகிச்சைக் கட்டணம் மிக அதிகமாக உள்ள
நிலையில் வசதி குறைந்தவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த பி.பி.எஸ்.
திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு 2,608 பேர் இத்திட்டத்தின்
வாயிலாகப் பயன் பெற்றனர் என்ற அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டிலும் இத்திட்டத்தைத் தொடர மாநில அரசு உத்தேசித்துள்ளதாகக்
கூறிய அவர், நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம்
தேதிக்குள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக்
கொண்டார்.

விண்ணப்பதாரர்கள் சிலாங்கூர்வாசிகளாக அல்லது பத்தாண்டுகளுக்கும்
மேலாகச் சிலாங்கூரில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு
குடும்ப வருமானம் 3,000 வெள்ளிக்கும் மேற்போகாமலும் இருக்க
வேண்டும் என அவர் சொன்னார்.

மேலும் பி.எஸ்.எச். எனப்படும் வாழ்க்கைச் செலவின உதவித் திட்ட
அங்கீகாரக் கடித்ததின் நகல் அல்லது இ-காசே திட்ட பதிவு தொடர்பான தகவல்களையும் அந்த விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும் என்றார் அவர்.

எந்த உதவித் திட்டத்திலும் பங்கு பெறாதவர்கள், குடும்பத்தில்
அதிகமானோரைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், குடும்பத்
தலைவரைப் பறிகொடுத்தவர்கள், நோயினால் பீடிக்கப்பட்ட குடும்ப
உறுப்பினர்களைக் கொண்டவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு
இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் bantuansihat.selangor.gov.my என்ற
அகப்பக்கம் வாயிலாக அதற்கான விண்ணப்பத்தைச் செய்யலாம். மேல்
விபரங்களுக்கு 1-800-22-6600 என்ற எண்களில் அல்லது [email protected] என்ற
மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :