ஷா ஆலம், ஜன. 23: பொதுமக்கள் பாடு அமைப்பில் பதிவு செய்வதை எளிதாக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடங்களில் 62 கவுண்டர்களை சிலாங்கூர் புள்ளியியல் துறை திறந்துள்ளது.

நேற்று முதல் ஜனவரி 28 வரை ஒன்பது மாவட்டங்களில் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. அதாவது உலு லங்காட் 15 மற்றும் சிப்பாங்கில் 9 கவுண்டர்கள் ஆகும் என முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பெட்டாலிங், உலு சிலாங்கூர், கோலா சிலாங்கூர் மற்றும் கோம்பாக் ஆகிய இடங்களில் தலா 6 கவுண்டர்களும், சபாக் பெர்ணமில் 4 மற்றும் கிள்ளான் மற்றும் கோலா லங்காட்டில் தலா 5 கவுண்டர்களும் திறக்கப்பட்டுள்ளன.

“மக்கள் அடையாள அட்டைகள், கைப்பேசிகள் மற்றும் வங்கிக் கணக்குத் தகவல்களைக் கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

“நீங்கள் குடும்பத் தலைவராக இருந்தால், குடும்ப உறுப்பினர்களின் தகவல்களும் அவசியம்” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

உதவி தேவைப்படுபவர்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள முதியவர்கள் இதில் பதிவு செய்வதை எளிதாக்கும் வகையில் இந்த கவுண்டர் திறக்கப்பட்ட தாகச் சிலாங்கூர் புள்ளியியல் துறை இயக்குநர் ஹர்தினி யாக்கோப் தெரிவித்தார்.

ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் தொடங்கப்பட்ட பாடு அமைப்பு, அதன்  இலக்கை அடையும் வண்ணம்  அரசாங்கத்திற்கு உதவும் வகையில் மக்கள் தொகை விவரங்களைக் கொண்டுள்ளது.

https://www.padu.gov.my என்ற இணைப்பின் மூலம் பதிவு மற்றும் தகவல் புதுப்பிப்புகளை ஜனவரி 2 முதல் மார்ச் 31 வரை செய்யலாம்.

ஜனவரி 21 நிலவரப்படி, 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிலாங்கூரில் பதிவு செய்துள்ளனர்.