ஷா ஆலம், ஜன 23: ஶ்ரீ செர்டாங் தொகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த (B40) மொத்தம் 500 மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு உதவியைப் பெற்றனர்.

கடந்த வாரம் முதல் தகுதி பெற்றவர்களுக்கு படிப்படியாக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி தெரிவித்தார்.

“தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் (தாவாஸ்) தரவுகளின் அடிப்படையில் இந்த பள்ளி உதவியை நாங்கள் விநியோகிக்கிறோம். கடந்த வாரம் முதல் 100 பெறுநர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விட்டது.

“இருப்பினும், இந்த உதவி தேவைப்படுவோர் சமூக சேவை மைய அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பிக்கலாம்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இந்த ஆண்டு திட்டமிடல் குறித்து கருத்து தெரிவித்த அவர், 400 குடும்பங்களை உள்ளடக்கிய கம்போங் ஶ்ரீ அமானின் மறு அளவீடு நிலை உட்பட பல முக்கிய பிரச்சனைகளில் தனது தரப்பு கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

“இந்தப் பிரச்சனைக்கான தீர்வு 60 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில் இந்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எகுயின் பார்க்கில் உள்ள சாலை நெரிசல் சிக்கலைச் சமாளிக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வு எட்டப்பட்டுள்ளது.

“பெஸ்தாரி பூச்சோங்கில் கைவிடப்பட்ட ரூமா சிலாங்கூர் கூ வீடுகள் தொடர்பாகவும் தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும் புதிய டெவலப்பருடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.