MEDIA STATEMENTNATIONAL

தைப்பூச விழா இன ஒற்றுமை, சகிப்புத்தன்மையின் அடையாளம்! அமைச்சர் கோபிந்த் சிங் புகழாரம்

பத்துமலை, ஜன 25-மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு தைப்பூச தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று தமது உரையில் தெரிவித்தார்.

தைப்பூச திருவிழா மலேசியாவில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றின் மதிப்புகளின் அடையாளமாக விளங்குகிறது.

உலகில் உள்ள இந்துக்களை ஈர்க்கும் திருவிழாவாக பத்துமலை தைப்பூசம் விளங்குகிறது என்பதை வரலாறுகள் கூறுகின்றன.

மடாணி மலேசியா  பல்வேறு இனக்களிடையே மரியாதை மற்றும் நல்லிணக்கத்தின் மதிப்பை வலியுறுத்துகிறது

நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு மற்றும் தியாகத்திற்காக மலேசிய அரசு இந்திய சமூகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இன்று பத்துமலை முருகன் பெருமான் திருத்தலத்தில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து கொண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக,  பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள வந்த  டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது.

லட்சக்கணக்கான பக்தர்கள் பத்துமலைத் தைப்பூசத்தில் கலந்து கொண்ட வேளையில் இம்முறை மடாணி அரசாங்கத்தின் சார்பில் இவர்கள் இருவரும் கலந்து சிறப்பித்தனர்.

காலை பத்து மணிக்கு பத்துமலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவில் வந்தடைந்த அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் ஸ்டீவன் சிம் ஆகியோரை ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் பொறுப்பாளர்கள் மேள தாளத்துடன் அழைத்து வந்தனர்.

இவர்கள் இருவரும் வழி நெடுகிலும் மக்களுடன் கைகுலுக்கி தைப்பூச வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.  பின்னர் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் ஸ்டீவன் சிம் ஆகியோருக்கு டான்ஸ்ரீ நடராஜா, அறங்காவலர் டத்தோ கண்ணா ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கெளரவித்தனர்.

இந்த விழாவில் பண்டார் கூங்சிக் நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின், சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பிரகாஷ், டமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மலேசியாவுக்கான இந்திய தூதர் ரெட்டி, தேவஸ்தானத்தின் செயலாளர் கு.சேதுபதி, பொருளாளர் டத்தோ பி.அழகன் , அறங்காவலர் க. கதிரேசன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.


Pengarang :