NATIONAL

எஸ்.பி.எம். தேர்வு இன்று தொடங்குகிறது – மாணவர்களுக்கு மந்திரி புசார் வாழ்த்து

ஷா ஆலம், ஜன 30 – இன்று தொடங்கும் 2023ஆம் ஆண்டுக்கான
எஸ்.பி.எம். தேர்வில் மாணவர்கள் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு
செய்ய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வாழ்த்து
தெரிவித்துள்ளார்.

தேர்வினை எழுதும் மாணவர்கள் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதை
உறுதி செய்யும் அதேவேளையில் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது
மனதை புத்துணர்வுடன் வைத்திருப்பதும் அவசியம் என்று அவர்
சொன்னார்.

பிரார்த்தனைகளை அதிகப்படுத்துங்கள். உங்கள் வேண்டுதல்களை
இறைவன் நிறைவேற்றுவார். மாணவர்கள் கேள்விகளுக்கு எளிதாகவும்
சீராகவும் பதிலளிப்பதற்கான வாய்ப்பு அமைய நானும் இறைவனைப்
பிரார்த்திக்கிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

இன்று தொடங்கும் எஸ்.பி.எம். தேர்வை நாடு முழுவதும் 395,870
மாணவர்கள் எழுதவிருக்கின்றனர். இந்நோக்கத்திற்காக 3,340 தேர்வு
மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தேர்வு சீரான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய 129,635 தேர்வுப்
பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சு முன்னதாக
கூறியிருந்தது.

எதிர்வரும் மார்ச் 7ஆம் தேதி வரை எழுத்துத் தேர்வு நடைபெறும். மலாய்
மொழிக்கான வாய்மொழித் தேர்வு இம்மாதம் 8 முதல் 11 வரை
நடைபெற்ற வேளையில் ஆங்கில மொழி வாய் மொழித் தேர்வு 17 முத 23
வரை நடைபெற்றது.


Pengarang :