NATIONAL

அமானா இக்தியார் வழி தொழில்முனைவோருக்கு வெ.260 கோடி நிதியதவி- டத்தோ ரமணன் தகவல்

கோலாலம்பூர், ஜன 30 – தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக அமானா
இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்.) வழி கடந்தாண்டு 260 கோடி வெள்ளி
ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு
மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் கூறினார்.

வறுமையை ஒழிப்பது மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த
திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்ததாக அவர் சொன்னார்.

மலேசியாவை பொறுத்த வரை தொழில்முனைவோருக்குப் பல வாய்ப்புகள்
உள்ளன. அமானா இக்தியாரின் இந்த சாதனையை நான் பெரிதும்
பாராட்டுகிறேன். அமானா இக்தியார் திட்டங்களுக்குப் பிரதமர் ஆதரவு
தருவார் எனவும் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள அமானா இக்தியார் தலைமையகத்திற்கு வருகை
புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமானா இக்தியார் மலேசியாவின் அறங்காவலர் வாரியத்
தலைவர் டத்தோஸ்ரீ சைட் ஹுசேன் சைட் ஜூனிட் மற்றும் அதன் நிர்வாக
இயக்கநர் ஷாமிர் அப்துல் அஜிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கு கடந்தாண்டு 260 கோடி வெள்ளியை
வழங்கினோம். இந்த திட்டத்திற்கு மேலும் பத்து கோடி வெள்ளி
அதிகரிக்கப்படுவதாக 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத்
தாக்கல் செய்த போது பிரதமர் அறிவித்தார். இதன் வழி இவ்வாண்டிற்கான
நிதி 261 கோடி வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :