NATIONAL

2022ஆம் ஆண்டில் புற்று நோயினால் ஏற்படும் மரண எண்ணிக்கை 12.6 விழுக்காடு அதிகரிப்பு

கோலாலம்பூர், பிப் 5 – நாட்டில் நிகழும் மரணச் சம்பவங்களில் புற்று நோய்
நான்காவது இடத்தில் உள்ளதை மலேசிய புள்ளிவிபரத் துறையின்
2023ஆம் ஆண்டு தரவுகள் காட்டுகின்றன.

கடந்த 2021ஆம் ஆண்டில் 10.5 விழுக்காடாக இருந்த புற்றுநோயினால் உயிர் இழப்போரின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 12.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் நிகழும் மரணங்களில் புற்றுநோய்
முதன்மையானதாகவும் (26.44 விழுக்காடு) அரசாங்க மருத்துவமனைகளில்
நிகழும் மரணங்களில் நான்காவதாகவும் (9.29 விழுக்காடு) உள்ளதை 2023
ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் தரவு அறிக்கை காட்டுகிறது என்று
சுகாதார அமைச்சர் டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

புற்றுநோய் தொடர்பான மரணச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக
இருப்பதற்கு அந்நோயின் தாக்கம் தாமதமாகக் கண்டு பிடிக்கப்படுவதும் ஒரு
காரணமாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். பதிவு செய்யப்பட்ட புற்று
நோய்ச் சம்பவங்களில் 60 விழுக்காடு மிகவும் தாமதமாக அதாவது
மூன்றாம் அல்லது நான்காம் கட்டத்தில் அடையாளம் காணப்பட்டவையாகும் என்றார் அவர்.

கடந்த 2017 முதல் 2021 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் புதிதாக 168,822
புற்று நோய்ச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டது மலேசிய
புற்றுநோய் பதிவகத் தரவுகள் மூலம் தெரியவருகிறது. மார்பகப்
புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், லிம்போமா
எனப்படும் வெள்ளை இரத்தஅணு புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய்
ஆகியவை அதிகமாக பதிவாகும் புற்றுநோய்களாக விளங்குகின்றன என்று
இன்று அனுசரிக்கப்படும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் ஜூல்கிப்ளி தெரிவித்தார்.

இந்நோயின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஏதுவாக உணவு முறையின்
வாயிலாக ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கும்படி பொது மக்களைக் கேட்டுக் கொண்ட அவர், உடற்பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபடும் வேளையில் மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்க்கும்படியும் வலியுறுத்தினார்.


Pengarang :