SELANGOR

ஜெலாஜா ஜோப்கேர் (வேலை வாய்ப்பு உலா) பல வேலை வாய்ப்புகளை வழங்குகிறது

கிள்ளான் பிப் 5: முன்னணி கையுறை உற்பத்தி தொழிற்சாலையான ஹர்தலெகா ஹோல்டிங்ஸ் பிஎச்டிக்குச் சிறந்த தொழில்முறை பணியாளர்களைப் பெற 2022 முதல் ஏற்பாடு செய்யப்பட்ட ஜெலாஜா ஜோப்கேர் நிகழ்வு உதவுகிறது.

தனது தரப்பு இந்நிகழ்வில் பங்கேற்று பொறியியல் துறை உட்பட பல தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளது என அதன் மனித வள மேலாளர் நஸ்ருன் அப்துல் ஹலிம் கூறினார்.

“நாங்கள் பொது பணியாளர்கள் முதல் நிர்வாகப் பணியாளர்கள் வரை கிட்டத்தட்ட 1,000 வேலை வாய்ப்புகளை வழங்குகிறோம். இது பல துறைகளையும் உள்ளடக்கியது.

“எதிர்காலத்தில் இந்த திட்டம் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம், ஏனெனில் இது மக்களுக்கு வேலை தேட உதவுவது மட்டுமல்லாமல், நிறுவனங்களுக்கு மனித வளங்களை பெறுவதை எளிதாக்கும்,” என்று அவர் கிள்ளானில் நடைபெற்ற ஜெலாஜா ஜோப்கேரில் பங்கேற்ற போது கூறினார்.

இதற்கிடையில், 32 வயதான ஷைபுல் நூர்டியன் என்ற ஆன்-கால் தொழிலாளி, இந்த வேலைவாய்ப்பு உலா தனக்கு முந்தைய வருமான ஆதாரமாக இருந்த சில்லறை வணிகத் துறைக்குத் திரும்புவதற்கான ஒரு தளமாக இருந்தது என்றார்.

“கோவிட்-19க்கு முன், நான் சில்லறை விற்பனையில் பணிபுரிந்தேன். ஆனால், பிறகு நிறுவனம் பாதிக்கப்பட்டு நிதி சிக்கல்களால் திசையை மாற்ற வேண்டி இருந்தது. அதனால் நான் கிக் துறைக்கு மாறினேன்.

“இப்போது பொருளாதாரம் மிகவும் ஸ்திரமாக வருவதால், எனது பழைய துறைக்குத் திரும்ப விரும்புகிறேன், ஏனெனில் அதுவே எனது திறமை. அதனால் நான் பொருத்தமான நிறுவனத்தைத் தேடுகிறேன், வாழ்வாதாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோயால் வருமானத்தை இழந்த குறைந்த, நடுத்தர மற்றும் உயர் திறமையான நபர்களுக்கு வேலை தேட உதவும் வகையில் ஜோப்கேர் நிகழ்வு உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூன்றாவது பதிப்பு எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கும். இரண்டாவது பதிப்பு கடந்த ஆகஸ்ட் முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று கிள்ளான் நகரில் நிறைவடைந்தது.


Pengarang :