NATIONAL

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து எட்டு வயதுச் சிறுவன் மரணம்

பாலிங், பிப் 13 – கட்டுமானத்தில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில்  எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் தாவார், கம்போங் பாடாங் லாலாங்கில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் நிகழ்ந்தது.

நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுவனான வான் அப்துல் அஜிஸ் வான் முகமது சலோஹூடினும் அவனது நான்கு வயது தம்பியான வான் முகமது ஃபைஹாக்கியும் விளையாடிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகப் பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சம்சுடின் மாமாட் கூறினார்.

வீட்டின் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த அவர்களின் தாயார் அவ்விடத்தில் விளையாட வேண்டாம் என பல முறை எச்சரித்துள்ளார். இருப்பினும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர் என்று அவர் சொன்னார்.

காலை 10.30 மணியளவில் அச்சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் பலத்தச் சத்தம் எழுந்ததைக் கேட்டு விரைந்துச் சென்ற அச்சிறார்களின் தாயார் வான் அப்துல் அஜிஸ்  செங்கல் குவியலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதையும் அவரின் தம்பி லேசான காயங்களுக்குள்ளானதையும்  கண்டு அதிர்ச்சியடைந்தார் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அண்டை வீட்டாரின் உதவியுடன் அச்சிறுவன் மீட்கப்பட்டு சிகிசைக்காக தாவார் மருத்துவ கிளினிக்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டான். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அச்சிறுவன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த சம்பவம் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.


Pengarang :