NATIONAL

சிறப்பு ஜே.பி.ஜே. சோதனையில் 125 குற்றப்பதிவுகள் வெளியீடு- மூன்று மோட்டார் சைக்கிள் பறிமுதல்

ஜோர்ஜ் டவுன், ஜன 13 – பினாங்கு மாநிலச் சாலை போக்குவரத்து இலாகா
(ஜே.பி.ஜே.) இங்குள்ள துன் டாக்டர் லிம் சோ இயூ விரைவுச் சாலையில்
நேற்றிரவு மேற்கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு எதிரான
ஒருங்கிணைந்த சிறப்பு அதிரடிச் சோதனையில் 125 குற்றப்பதிவுகள்
வெளியிடப்பட்டன.

போலீஸ் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட
இந்த சோதனையில் மாற்றியமைக்கப்பட்ட மூன்று மோட்டார்
சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அத்துறை இன்று இங்கு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.

மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த
சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக ஜே.பி.ஜே. 125
குற்றப்பதிவுகளை வெளியிட்ட வேளையில் போலீஸ் துறை 60
குற்றப்பதிவுகளையும் சுற்றுச் சூழல்துறை 25 குற்றப்பதிவுகளையும்
வெளியிட்டன.

அமலாக்க நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு ஏதுவாக சட்டதிட்டங்களையும்
விதிமுறைகளையும் பின்பற்றி நடக்கும்படி மோட்டார்
சைக்கிளேட்டிகளையும் அதில் பயணிப்போரையும் கேட்டுக் கொள்கிறோம்.
சாலைப் பாதுகாப்பு நாம் அனைவரின் பொறுப்பாகும் என ஜே.பி.ஜே. அந்த
அறிக்கையில் தெரிவித்தது.

இதனிடையே, நிபோங் திபால், சிம்பாங் அம்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட
பெருநாள் மாதச் சிறப்பு சோதனை நடவடிக்கையில் இரு தொழிற்சாலை
பஸ்களைத் தாங்கள் தடுத்து வைத்துள்ளதாக அத்துறை மேலும் கூறியது.

அந்த பஸ்களில் ஒன்றை வாகனமோட்டும் லைசென்ஸ் மற்றும் பொது
போக்குவரத்து வாகன லைசென்ஸ் (பி.எஸ்.வி.) இல்லாத அந்நிய பிரஜை
செலுத்தியுள்ளார். மற்றொரு பஸ்ஸை வாகனமோட்டும் லைசென்ஸ் மற்றும் பொது போக்குவரத்து வாகன லைசென்ஸ் இன்றி உள்நாட்டவர் செலுத்தியுள்ளார். மேலும், இந்த பஸ்ஸின் புஸ்பாகோம் சோதனை சான்றிதழும் காலாவதியாகி விட்டது என் அது குறிப்பிட்டது.


Pengarang :