SELANGOR

வாடிக்கையாளர்களுக்குத் தரமான நீரை வழங்க ஆண்டுக்கு 300 கிலோ மீட்டருக்குப் பழைய குழாய்கள் மாற்றம்

கோலாலம்பூர், பிப் 23 – பயனீட்டாளர்களின் நல்வாழ்வுக்காகச் சேவைத்
தரத்தை மேம்படுத்தும் வகையில் தரமான நீர் சேவையை நிலையாக
வழங்குவதற்கு ஏதுவாக தாங்கு திறன் மற்றும் பொறுப்புணர்வுடன்
செயல்பட பெருங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம்
(ஆயர் சிலாங்கூர்) உறுதிபூண்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் கடந்த பிப்ரவரி
1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட புதிய நீர் கட்டண முறைக்கு ஏற்ப
பல்வேறு முதலீட்டு திட்டங்களை முன்னெடுப்பதில் தாங்கள் தீவிரமாகச்
செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் கூறியது.

தற்போது ஆண்டுக்கு 150 கிலோ மீட்டராக உள்ள பழைய குழாய்களை
மாற்றும் திட்டத்தை இவ்வாண்டில் 300 கிலோ மீட்டராகவும் எதிர்வரும்
2034ஆம் ஆண்டில் 400 கிலோ மீட்டராகவும் மாற்றுவது போன்றத்
திட்டங்களின் வாயிலாகப் பொது மக்கள் நீர் கட்டண மறுசீரமைப்பின்
அனுகூலங்களை அனுபவிக்க முடியும்.

இந்த திட்டங்களின் வாயிலாக 2040ஆம் ஆண்டிற்குள் 5,000 கிலோ மீட்டர்
தொலைவுக்கு பழைய குழாய்களை மாற்ற இயலும் என்று அந்நிறுவனம்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

சுங்கை ராசாவ் முதல் கட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தை வரும்
2025ஆம் ஆண்டிலும் பூலாவ் கித்தாம் ஒருங்கிணைந்த நீர் சுத்திகரிப்புத்
திட்டத்தை வரும் 2026ஆம் ஆண்டிலும் பூர்த்தி செய்வதன் மூலம் வரும்
2030ஆம் ஆண்டுவாக்கில் நீர் கையிருப்பை 20 விழுக்காடாக உயர்த்தும்
இலக்கை அடைய முடியும் என்றும் அது குறிப்பிட்டது.

தளவாடங்களை தரம் உயர்த்துவது, பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளையும் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இதன் அடிப்படையில் நீர் சேகரிப்பு குளங்கள் அமைப்பது, நீர் அழுத்தம் குறைவாக உள்ள பகுதிகளில் நீர் இறைப்பு பம்ப்களை அமைப்பது போன்ற திட்டங்களும் மேற்கொள்ளப்படும்.


Pengarang :