NATIONAL

ரிங்கிட்டின் மதிப்புச் சரிவை அரசாங்கம் அலட்சியப்படுத்தவில்லை- பிரதமர் உத்தரவாதம்

கோலாலம்பூர், பிப் 23 – ரிங்கிட் மதிப்புச் சரிவை மடாணி அரசாங்கம்
அலட்சியப்படுத்தவோ எளிதாக எடுத்துக் கொள்ளவோ கிடையாது. மாறாக,
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை அது தொடர்ந்து
மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.

அதேசமயம், முதலீட்டு எண்ணிக்கை தொடர்ந்து வலுவுடன் இருப்பதை
உறுதி செய்யும் நடவடிக்கையிலும் தாங்கள் ஈடுபட்டு வருவதாக
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ரிங்கிட்டின் மதிப்பை அணுக்கமாக கண்காணித்து வரும்படி மத்திய வங்கி
(பேங்க் நெகாரா) பணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அரசாங்கத்தின்
பங்காக இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணும் நோக்கில் அமைச்சுகள்,
அதிகாரிகள் மற்றும் முதலீட்டு மன்றம் உள்ளிட்டத் தரப்பினர் தினமும்
சந்திப்புகளை நடத்தி வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இது உண்மையில் கவலையளிக்கக் கூடியது. நாங்கள் முன்னோக்கி
பார்க்கிறோம். ஆயினும் ஒட்டுமொத்த முதலீட்டைப் பார்க்கையில்
எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக பெறப்பட்டுள்ளது. பணவீக்கமும்
தொடர்ந்து குறைந்து வருவதோடு அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில்
வளர்ச்சியும் நிலையாக இருந்து வருகிறது என்றார் அவர்.

அவர்கள் (விமர்சனம் செய்வோர்) 1998ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகின்றனர்.
அப்போது ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சி கண்டிருந்ததோடு பணவீக்கமும்
அதிகரித்தது. அதோடு மட்டுமின்றி வேலையில்லா விகிதம் உயர்வு கண்டு
முதலீடுகளும் இல்லாத நிலை உண்டானது என்று மலேசியாவின்
அனைத்துலக நிதி மையமாக துன் ரசாக் எக்ஸ்சேஜ் மையத்தை தொடக்கி
வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இதனிடையே அரிசி விநியோகம் குறித்து கருத்துரைத்த பிரதமர் இன்று
மாலை தமது தலைமையில் நடைபெறவிருக்கும் வாழ்க்கைச் செலவினம் மீதான தேசிய நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் அரசி விநியோகம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றார்.

மீன், கோழி, இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப்
பொருள்களை குறைவான விலையில் விற்பதற்கான திட்டங்கள் குறித்தும்
இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :