MEDIA STATEMENTNATIONAL

குழுவாக இணைந்து வேலை செய்வீர்- மாநில அரசு ஊழியர்களுக்கு மந்திரி புசார் வலியுறுத்து

ஷா ஆலம், மார்ச் 10- மாநில அரசின் கொள்கைகள் சிறப்பான முறையில் நிறைவேற்றப்படுவதற்கு ஏதுவாக குழுவாக இணைந்து வேலை செய்யும்படி மாநிலத்திலுள்ள அரசு ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வரையப்பட்ட திட்டங்களை அனைவரும் ஒன்றாக இணைந்து நிறைவேற்ற வேண்டுமே தவிர, சுயத் திருப்திக்காக ஒருவர் மட்டுமே மேற்கொள்ளக் கூடாது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.

மாநில அரசின் கொள்கைகளை அனைவரும் உணர்ந்து கொள்வதற்கு ஏதுவாக நோன்பு பெருநாளுக்குப் பிறகு நான் களத்தில் இறங்கி அனைத்து அரசு ஊழியர்களையும் சந்திக்கவிருக்கிறேன். முடிவுகள் தனிப்பட்ட முறையிலும் கும்பலாகவும் குழுவாகவும் எடுக்கப்படுவதைக் காண நான் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்ற 2023 சிறந்த ஊழியர்களுக்கான விருதளிப்பு மற்றும் 2024ஆம் ஆண்டிற்கான ‘ஜாசமூ டிகெனாங்‘ விருது வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசு ஊழியர்களிடையே காணப்படும் சிறப்பான பணித் தன்மை மற்றும் குழுவாக பணியாற்றும் உணர்வு ஆகியவை தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

துறைத் தலைவர்கள் தனிப்பட்ட கருத்தைக் கொண்டிருந்தால் நாம் சந்தித்து பேசுவதற்கு வழிகள் உள்ளன. அதை விடுத்து கீழறுப்பு செய்வது அல்லது இல்லாத விஷயங்களை சம்பந்தமில்லாத தரப்பினரிடம் சொல்வது முறையற்றது என்றார் அவர்.

இத்தகைய செயல்களால் நாம் தீட்டிய திட்டங்கள் யாவும் தோல்வியில் முடியும் என்பதோடு இப்போது அல்லது எதிர்காலத்தில் விளைவுகளையும் ஏற்படுத்தி விடும் என்று அவர் சொன்னார்.


Pengarang :