SELANGOR

சிலாங்கூரில் இந்திய சமூகத் தலைவர்கள் நியமனத்தில் மஇகா பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு- பாப்பாராய்டு

ஷா ஆலம், மார்ச் 11- சிலாங்கூர் மாநிலத்தில்  இந்திய சமூகத் தலைவர்கள் நியமனத்தில் மஇகாவுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கோடி காட்டியுள்ளார்.

கடந்த மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிட்ட தொகுதிகளில் மஇகா சார்பில் இந்திய சமூகத் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் சொன்னார்.

ஓரிரு தொகுதிகளுக்கான மஇகாவின் பிரதிநிதிகளின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேளையில் அவை தற்போது பரிசீலனையில் உள்ளன. மஇகா சார்பில் இந்திய சமூகத் தலைவர்கள் நியமிக்கப் படுவதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பெயர்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றார் அவர்.

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியைப் பொறுத்த வரை அமானா கட்சியின் ஒரு இடம் தவிர்த்து இதர அனைத்து தொகுதிகளுக்கும் இந்திய சமூகத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இது தவிர தேசிய முன்னணி போட்டியிட்ட தொகுதிகளுக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் உள்ள ஏறக்குறைய 64 இந்திய சமூகத் தலைவர்கள் உள்ளனர். அவர்களில் 28 பேருக்கு மட்டும் இன்னும் நியமனக் கடிதங்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இன்னும் அடுத்த வாரத்திற்குள் அக்கடிதங்கள் வழங்கப்பட்டு விடும் என்றார் அவர்.

கடந்தாண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் சிலாங்கூரில் 12 தொகுதிகளில் அம்னோ தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :