NATIONAL

அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் சட்ட உதவி முகப்பிடங்கள்- அடுத்த மாதம் செயல்படும்

கோலாலம்பூர், மார்ச் 12- சட்ட உதவியை பொதுமக்கள் பெறுவதற்கான
வாய்ப்பினை வழங்குவதற்காகத் தீபகற்ப மலேசியாவிலுள்ள அனைத்து
நீதிமன்ற வளாகங்களிலும் சட்ட உதவி முகப்பிடங்கள் அடுத்த மாதம்
தொடங்கி செயல்படும்.

இந்த சட்ட உதவி முகப்பிடங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதலாவது புதன்கிழமை செயல்படும் என்று வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் கேரன் சியா யீ லின் கூறினார்.

வசதி குறைந்தவர்கள் சட்ட ஆலோசனைகளையும் சட்ட
பிரதிநிதித்துவத்தையும் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த
முகப்பிடங்கள் அமைக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாநிலத்தின் தேவையை நிறைவு செய்யும் வகையில் தீபகற்ப
மலேசியாவில் 14 சட்ட உதவி மையங்கள் செயல்படுவதாகக் கூறிய
அவர், கடந்த பத்தாண்டுகளில் 124,000க்கும் மேற்பட்டோர் இந்த மையங்கள்
வாயிலாகப் பயன் பெற்றுள்ளனர் என்றார்.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு
கோப்பையும் கவனிப்பதற்கான குறைந்த பட்ச தொழில்முறைக் கட்டணம்
1,000 வெள்ளியாகும். கடந்த பத்தாண்டுகளில் எங்களின் தன்னார்வலர்கள்
வழங்கிய இலவசச் சட்ட ஆலோசனைக் கட்டணத்தின் மதிப்பு 12 கோடி
வெள்ளியாகும். கோலாலம்பூரில் உள்ள சட்ட உதவி மையம் மட்டும்
கடந்தாண்டு 2,700க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டினருக்கு சட்ட உதவிகளை
வழங்கியுள்து என அவர் குறிப்பிட்டார்.

தேசிய சட்ட உதவி மற்றும் தேசிய சட்ட உதவி அறவாரிய செயல்குழு
உதவி என்ற மற்றொருத் திட்டத்தையும் நாங்கள் அமல்படுத்தியுள்ளோம்.
இந்த திட்டத்தின் வாயிலாக வழக்கறிஞர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் உள்பட அனைத்து உறுப்பினர்களும் ஆண்டுக்கு ஒரு வழக்கை தன்னார்வலர் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.

மாநில சட்ட உதவி மையங்கள் ஏற்பாடு செய்யும் சட்ட உதவி
விழிப்புணர்வு நிகழ்வுகளில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதும்
அந்த திட்டத்தில் ஒரு பகுதியாகும் என்றார் அவர்.


Pengarang :