NATIONAL

ஒற்றுமை அரசாங்கத்தில் ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்- அமைச்சர் ஃபாஹ்மி உத்தரவாதம்

கோலாலம்பூர், மார்ச் 12- புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான மலேசிய நன்னெறி கோட்பாடு அத்தொழில் துறையினர் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் ஊடகச் சுதந்திரத்தை பாதுகாப்பதில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு உள்ள கடப்பாட்டை தொலைத் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் இன்று மறு உறுதிப்படுத்தினார்.

மலேசிய பத்திரிகைக் கழகம், தேசிய பத்திரிகையாளர் தொழிற்சங்கம், தகவல் இலாகா (ஜெபென்) உத்தேச மலேசிய ஊடக மன்ற அமைப்புக் குழு மற்றும் தொடர்புடைய தரப்பினருடன் கலந்தாலோசித்தப் பின்னரே இந்த நன்னெறி கோட்பாடு வெளியிடப்பட்டதாக அவர் சொன்னார்.

கடந்த காலங்களில் மக்களவையில் பல முறை நான் ஊடகங்களைத் தற்காத்துப் பேசியுள்ளேன். அதனால் கடுமையான தாக்குதல்களுக்கும் ஆளாகியுள்ளேன். பணிகளை ஆற்றும் விஷயத்தில் நான் எப்போதும் ஊடகவியலாளர்களின் உரிமைகளைக் காக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருவேன் என அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயகவாதி மற்றும் சீர்திருத்தவாதி என்ற முறையில் அவர்களின் உரிமையை ஒருபோதும் முடக்க மாட்டேன். ஊடகச் சுதந்திரம் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு மேம்படுத்தப் படவும் வேண்டும் என்று மக்களவையில் இன்று அமைச்சர் கேள்வி பதில் அங்கத்தின் போது அவர் கூறினார்.

கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நன்னெறிக் கோட்பாட்டின் விளைவாக ஊடகச் சுதந்திரம் முடக்கப்படாமலிருப்பதற்கு அரசாங்கம் எத்தகைய கடப் பாட்டைக் கொண்டுள்ளது என்று தாசேக் குளுகோர் உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

ஊடக அங்கீகார அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் பல ஊடக நிறுவனங்கள் கவலையைப் வெளிப்படுத்தியிருந்ததோடு இது ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது என தெரிவித்திருந்தன.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள், உள் நாட்டு ஊடகங்கள், வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் மலேசிய பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு  அங்கீகார அட்டையின் செல்லுபடியாகும் காலம் ஈராண்டுகளாகத் தொடர்ந்து இருக்கும் என்று தகவல் இலாகா கடந்த வாரம் கூறியிருந்தது.


Pengarang :