NATIONAL

குடிநுழைவுத் துறை தடுப்புக்காவல் முகாம்களில் அந்நியப் பிரஜைகள் துன்புறுத்தலா? அமைச்சர் மறுப்பு

ஷா ஆலம், மார்ச் 12- இந்நாட்டிலுள்ள குடிநுழைவுத் துறை முகாம்களில்
அந்நிய நாட்டினர் துன்புறுத்தப்படுகின்றனர் அல்லது சாக
விடப்படுகின்றனர் என்ற எச்.ஆர்.டபள்யூ. என்ற மனித உரிமை
கண்காணிப்பு அமைப்பின் குற்றச்சாட்டை உள்துறை அமைச்சு
மறுத்துள்ளது.

குடிநுழைவுத் துறை முகாம்களில் கொள்ளளவைக் காட்டிலும் அதிகமான
கைதிகள் உள்ளதால் அங்கு நெரிசல் மிகுந்த காணப்படுகிறது என்ற அந்த
வெளிநாட்டு அரசு சாரா அமைப்பின் குற்றச்சாட்டையும் உள்துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நிராகரித்தார்.

நாடு முழுவதும் உள்ள 20 குடிநுழைவுத் துறை தடுப்புக் காவல்
முகாம்களைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் கடந்தாண்டு 12 கோடியே 30
லட்சம் வெள்ளியைச் செலவிட்டது. மேலும் அவர்களுக்கு
உணவளிப்பதற்கும் தாயகத்திற்குத் திருப்பி அனுப்புவதற்கான பெர்ரி
அல்லது விமானக் கட்டணங்களுக்காகவும் மேலும் 8 கோடி வெள்ளியை
செலவிட்டது என்று அவர் சொன்னார்.

இந்த அளவுக்கு அவர்களை நாங்கள் கவனித்து வருகிறோம். ஆனால்,
நாங்கள் அவர்களை சாகும்வரை துன்புறுத்துவதாக எச்.ஆர்.டபள்யூ.
குற்றஞ்சாட்டுகிறது. இவ்விவகாரம் தொடர்பில் விளக்கம் பெறுவதற்காக
உள்துறை அமைச்சு மற்றும் குடிநுழைவுத் துறையை நாடாளுமன்ற சிறப்பு
செயல்குழு அழைத்தது. இந்த விசாரணைக்கு எச்.ஆர்.டபள்யூ.வுக்கும்
அழைப்பு விடுக்கப்பட்டது என்றார் அவர்.

துன்புறுத்தல் அல்லது இறப்பு தொடர்பான ஆதாரங்களை வெளியிடும் படி
கோரப்பட்டபோது அவர்களால் சிறிய ஆதாரத்தைக் கூட முன்வைக்க
முடியவில்லை. ஆனால் அவர்களின் பிரசாரம் உலகம் முழுவதும்
பரவிட்டது என்று அவர் கூறினார்.

மக்களவையில் இன்று தடுப்புக் காவல் முகாம்களில் அந்நிய பிரஜைகள்
துன்புறுத்தப்படுவதாக வெளிவந்த எச்.ஆர்.டபள்யூ.வின் குற்றச்சாட்டு
குறித்து பாகான் உறுப்பினர் லிம் குவான் எங் எழுப்பிய கேள்விக்குப்
பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இருபதாயிரம் தடுப்புக் காவல் கைதிகளை தடுத்து வைப்பதற்குரிய
வசதியை நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் துறையின் தடுப்புக்
காவல் மையங்கள் கொண்டுள்ளதாகவும் கடந்த மார்ச் 7ஆம் தேதி வரை
நாடு முழுவதும் உள்ள மையங்களில் 13,635 கைதிகள் மட்டுமே தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :