NATIONAL

14,000 மெத்தம் பேட்டமைன் மாத்திரைகளுடன் தாய்லாந்து நபர் கைது

அலோர் ஸ்டார், மார்ச் 12: கடந்த மார்ச் 6ஆம் தேதி லங்காவி பயணப் படகு முனையத்தில் உள்ள சர்வதேச வருகை நிலையத்தில், 14,000 மெத்தம்பேட்டமைன் மாத்திரைகளுடன் தாய்லாந்து நபரை ராயல் மலேசியன் சுங்கத் துறை (ஜேகேடிஎம்) கைது செய்தது.

லங்காவி போதைப்பொருள் அமலாக்கப் பிரிவின் சுங்க அதிகாரிகள் குழு 42 வயதுடைய நபரைக் கைது செய்ததாகக் கெடா சுங்கப் பணிப்பாளர் நோர் இசா அப்துட் லதிஃப் தெரிவித்தார்.

முதற்கட்ட சோதனையில் 1,102 கிராம் எடையுள்ள 11,600 மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் அடங்கிய நீல நிற பொட்டலம் நேர்த்தியாக மூடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த நபரின் கருப்பு இடுப்பு பையை ஆய்வு செய்ததில் 228 கிராம் எடையுள்ள 2,400 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரிங்கிட் 210,000 ஆகும் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபர் மெத்தம்பேட்டமைன் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது என்றும், ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் மேல் விசாரணைக்காக மார்ச் 13 வரை அந்நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாகவும் நோர் இசா கூறினார்.

“கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1-800-88-8855 அல்லது அருகில் உள்ள சுங்க அலுவலகத்திற்கு அழைப்பதன் மூலம் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு சுங்கம் கேட்டுக்கொள்கிறது,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :