NATIONAL

730 மேம்பாட்டுத் திட்டங்களில் 2.8 விழுக்காடு மட்டுமே பிரச்சனைக்குரியவை- மக்களவையில் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 12 –  பொதுப்பணி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 463 கோடி வெள்ளி மதிப்பிலான 182 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நத்தா லிங்கி தெரிவித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 730 திட்டங்களில் 21 திட்டங்கள் அல்லது 2.8 விழுக்காடு மட்டுமே பிரச்சினைக்குரிய  திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

கட்டுமானத்தில் உள்ள மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்களுடன் ஒப்பிடுகையில்  பிரச்சினைக்குரிய திட்டங்களின் எண்ணிக்கை மிகச் சிறியதாகும். பொதுப்பணி அமைச்சு இந்த பிரச்சினைக்குரிய திட்டங்களை எப்போதும் கண்காணித்து அவற்றைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் அவர்.

மக்களவையில் இன்று மேன்மை தங்கிய மாமன்னரின் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்  மீதான விவாதத்தை முடித்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

இதற்கிடையில், சாலைகள், சமிக்ஞை விளக்குகள், சாலை விளக்குகள், அறிவிப்பு பலகைகள், சாலை உபகரணங்கள் மற்றும் பிற பொது வசதிகளுக்குச் சேதம் விளைவிப்பது தொடர்பாக மொத்தம் 12,245 புகார்களை மைஜாலான் செயலி   மூலம் அமைச்சு பெற்றுள்ளதாக நந்தா குறிப்பிட்டார்.

எனினும்,  கிடைக்கப்பெற்ற புகார்களில் 25.91 விழுக்காடு அல்லது 3,173 புகார்கள் மட்டுமே அமைச்சின் அதிகார வரம்பிற்குட்பட்ட   சாலைகள் சம்பந்தப்பட்டவை என அவர் மேலும் கூறினார்.

மொத்தம் 2,345 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன. 2,193 அல்லது 93.52 விழுக்காட்டுப் புகார்களுக்கு ஒன்று முதல் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.


Pengarang :