NATIONAL

தீ விபத்தில் குறைந்தது ஐந்து வீடுகள் எரிந்து நாசமாகின

கோலாலம்பூர், மார்ச் 13: நேற்று இரவு 9.45 மணியளவில்  இந்தியா செட்டில்மெண்ட், கம்போங் பண்டாணில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஐந்து வீடுகள் எரிந்து நாசமானது, பாதிக்கப்பட்டவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பிரதான சாலைக்கு ஓடியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சமையலறை தீப்பற்றி எரிவதைக் கண்டதும் உடனடியாக மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குச் சம்பவம் குறித்து தெரிவித்ததாகவும் எஸ் துளசி கூறினார்.

“சம்பவத்தின் போது, வீட்டில் ஏழு குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர், எங்களுக்கு எந்த பொருட்களையும் காப்பாற்ற நேரம் இல்லை, நான் என்னை காப்பாற்றி கொள்ள மட்டுமே நினைத்தேன் என்றார்.

“அடையாள அட்டைகள், உடைகள், மற்ற முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இப்போது நானும் எனது குடும்பமும் ஒரே ஒரு உடையில் தான் இருக்கிறோம்” என்று அவர் சம்பவம் நடந்த இடத்தில் பெர்னாமாவிடம் கூறினார்.

தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் பணியில் நான்கு தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் மூன்று டேங்கர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பெர்னாமா கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, தீ கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த அனுரதா தெரிவித்தார்.

“அங்கு வீடுகள் நெருக்காமக இருந்ததால் தீ வேகமாகப் பரவியது,” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதைக் கண்டதாகவும், சில குடியிருப்பாளர்களால் மின்விசிறிகள் மற்றும் பாத்திரங்கள் போன்ற வீட்டுப் பொருட்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்றும் கே சரவணக்குமார் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :