NATIONAL

நாடு முழுவதும் தமிழப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி

ஷா ஆலம், மார்ச் 13 – இவ்வாண்டிற்கான புதிய பள்ளித் தவணை கடந்த திங்கட்கிழமை தொடங்கிய வேளையில்  நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை கடந்தாண்டை விட வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த எண்ணிக்கை வீழ்ச்சி நாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் மீது சமூகம் கொண்டுள்ள கவலையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பில் 11,871 மாணவர்கள் சேர்ந்த வேளையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 11,677 ஆக குறைந்துள்ளதை மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் வெளியிட்டுள்ள தரவுகள் காட்டுகின்றன.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் மாணவர்கள் எண்ணிக்கை கடந்தாண்டை காட்டிலும்  சிறிதளவு உயர்வைக் கண்டிருந்த போதிலும் மற்ற மாநிலங்களில் உள்ளப் பள்ளிகள் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

சிலாங்கூர் மாநிலத்தில் கடந்தாண்டு 3,887 மாணவர்கள் முதலாம் ஆண்டில் நுழைந்த வேளையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 3,889ஆக உயர்ந்துள்ளது. நெகிரி செம்பிலானில் 1,221 மாணவர்களும் (கடந்தாண்டு 1,213 மாணவர்கள்) மலாக்காவில் 339 மாணவர்களும் (கடந்தாண்டு 330 மாணவர்கள்) ஜோகூரில் 1,929 மாணவர்களும் (கடந்தாண்டு 1,913 மாணவர்கள்) முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர்.

மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி கண்ட மாநிலங்களில் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், பகாங், கூட்டரசு பிரதேசம் ஆகியவை உள்ளன.

பெர்லிஸ் மாநிலத்தில் இவ்வாண்டு 4 மாணவர்களும் (கடந்தாண்டு 9 மாணவர்கள்), கெடாவில் 948 மாணவர்களும் (கடந்தாண்டு 1,055 மாணவர்கள்), பேராக்கில் 1,670 மாணவர்களும் (கடந்தாண்டு 1,724 மாணவர்கள்) பகாங்கில் 315 மாணவர்களும் (கடந்தாண்டு 350 மாணவர்கள்) கூட்டரசு பிரதேசத்தில் 522 மாணவர்களும் (கடந்தாண்டு 535 மாணவர்கள்) முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

கிளந்தான் மாநிலத்தைப்  பொறுத்த வரை கடந்தாண்டைப் போலவே இவ்வாண்டு ஆறு மாணவர்கள் மட்டுமே முதலாம் ஆண்டில் நுழைந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை நேற்று வரை பள்ளியில் பதிவு செய்த மாணவர்களை அடிப்படையாகக் கொண்டது என்று மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் கூறினார்.

அடுத்து வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை உயர்வு காண்பதற்குரிய வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளின் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு பிற மொழிப் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்புவது, இந்திய சமூகத்தில் குறைந்து வரும் மக்கள் தொகை, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாதது உள்ளிட்டவை காரணங்களாகக் கூறப்படுகின்றன.


Pengarang :