ANTARABANGSA

காஸாவில் இஸ்ரேலியத்  தாக்குதலில் மேலும் மூன்று ஊடகவியலாளர்கள் பலி

இஸ்தான்புல், மார்ச் 24- காஸா பகுதியில் நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய  மற்றொரு  தாக்குதலில் மேலும் மூன்று பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த மூவருடன் சேர்த்து கடந்தாண்டு அக்டோபர் 7 முதல் நடைபெற்று வரும் போரில்  இறந்த ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது என்று பிராந்தியத்தின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

முகமது அல்-ரிஃபி, அப்துல் ரஹ்மான் சைமா மற்றும் மஹ்மூட் இமாத் இஸ்  ஆகிய மூவரே கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்என அடையாளம் காணப்பட்டதாக  ஊடக அலுவலகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி கூறியது.

பாலஸ்தீன மக்களின் குரலை அடக்கவும், உண்மைகளை மறைக்கவும், பிராந்திய மற்றும் சர்வதேச சமூகத்திற்கு தகவல் சென்றடைவதைத் தடுக்கவும் இஸ்ரேல் வேண்டுமென்றே காஸாவில் பத்திரிகையாளர்களைக் கொல்வதாக அந்த அலுவலகம் குற்றஞ்சாட்டியது.

கடந்த அக்டோபர் 7 முதல் காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும்  இராணுவத் தாக்குதலில் 32,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.   இப்போரில் மேலும் சுமார் 74,300 பேர் காயமடைந்துள்ளனர். இதுதவிர,   பேரழிவு, இடப்பெயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை  உள்பட பெரும் இன்னல்களை காஸா மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இஸ்ரேலின் போர், பிராந்தியத்தின் பெரும்பாலான மக்களை உள் இடப்பெயர்வுக்குள் தள்ளியுள்ளது. அங்குள்ள  உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக சர்வதேச நீதிமன்றத்தில்   குற்றம் சாட்டப்பட்டது. கடந்த  ஜனவரி மாதம் வழங்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பில், இனப்படுகொலை நடவடிக்கைகளை நிறுத்தவும் காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யவும் டெல் அவிவுக்கு உத்தரவிட்டது.


Pengarang :