NATIONAL

எதிர்கால இலக்கு, இரு நாட்டு உறவு தொடர்பில் அன்வார்-பிராபோவோ விவாதம்

கோலாலம்பூர், ஏப் 4 – இந்தோனேசிய அதிபரும் தற்காப்பு அமைச்சருமான
பிராபோவோ சுபியாந்தோவுடன் இன்று நடத்தப்பட்ட சந்திப்பில்
மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவை மேலும்
வலுப்படுத்துவதற்கான அடுத்தக் கட்ட இலக்குகள் குறித்து
விவாதிக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

புத்ராஜெயாவிலுள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்
போது தங்களின் பணி தொடர்பான அனுபவங்கள் மற்றும் கருத்துகளைப்
பரிமாறிக் கொண்டதாக அவர் சொன்னார்.

எங்களின் இருவரின் அரசியல் பயணம் ஏறக்குறைய ஒரே
மாதிரியானதுதான். பதவி ஏற்பதற்கு முன்னர் பல்வேறு சவால்களை
நாங்கள் எதிர்கொண்டோம். எங்கள் பேச்சில் இந்த விஷயமும் பகிர்ந்து
கொள்ளப்பட்டது. அது தவிர, கோலாலம்பூரில் உள்ள விக்டோரியா
கல்லூரியில் பயிலும் போது ஏற்பட்ட அனுபவங்களையும் பிராபோவோ
நினைவுக்கூர்ந்தார் என அன்வார் தனது பேஸ்புக் பதிவில்
குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் எட்டாவது அதிபராக பதவியேற்கவிருக்கும் பிராபோவோவுக்கு
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அன்வார், இரு தரப்பின் எதிர்கால
நலன்களுக்காக இவ்விரு அண்டை நாடுகளுக்கிடையிலான உறவு
தொடர்ந்து வலுப்பெறும் எனத் தாம் நம்புவதாகக் கூறினார்.

இந்தோனேசியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரின் மலேசியாவுக்கான
ஒரு நாள் சிறப்பு வருகையின் ஒரு பகுதியாகப் பிரபோவோவின் இந்த
பயணம் அமைந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

2024-2029 தவணைக்கு இந்தோனேசியாவின் அதிபராக பிராபோவோ
தேர்ந்தெடுக்கப்பட்டதாக கடந்த மார்ச் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டது.

பிரதமர் அன்வார் தவிர்த்து தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது
காலிட் நோர்டினுடனும் அதிபர் பிராபோவோ தனிப்பட்ட சந்திப்பை
நடத்தினார்.


Pengarang :