NATIONAL

அரசாங்க மானியத்தின் வழி மக்களில் 85 சதவீதத்தினர் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர்

பாடாங் பெசார், ஏப் 4: அரசாங்கம் வழங்கும் மானிய உதவிகள், இலக்கிடப்பட்டுள்ள பிரிவினருக்கு சென்று சேர்வதையும், அவர்களில்  80 முதல் 85 சதவீத மக்கள் உண்மையில் அதனை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் பாடுபடுவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

உதவி மானிய பலன்களை பணக்காரர்கள் மற்றும் நாட்டிலுள்ள சுமார் 3.5 மில்லியன் வெளிநாட்டினர் அனுபவிப்பதை தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது என்றார்.

“நாங்கள் எண்ணெய்க்கு மானியம் கொடுக்கிறோம், இப்போது யாருக்கு லாபம்? ஆம், மலேசியாவில் உள்ள,  3.5 மில்லியன் அல்லது கிட்டத்தட்ட நான்கு மில்லியன் வெளிநாட்டினரும் எண்ணெய் மானியங்களைப் பெறலாம், ஏனென்றால்  அனைவருக்கும் மானிய எரிபொருளை வாங்கும் அளவில் அது சுலபமாக  கிடைக்கிறது.

“நம் நாட்டில் உள்ள பணக்காரர்கள் கூட எண்ணெய் மானியங்களைப் பெறுகிறார்கள். எனவே மானியத்தின் பலன் இலக்கிடப்பட்டுள்ள பிரிவினரில் 80 முதல் 85 சதவிகித மக்களுக்கு நேரடியாகச் சென்று சேரும் வகையில் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாகவும் அதே வழிமுறை  அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கட்டண உயர்வு அதிக வருமானம் உள்ள 15 சதவீத மக்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், மின் கட்டண உயர்வு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே என்றும், பெரும்பாலான மக்கள் கட்டண உயர்வை எதிர் கொள்வதில்லை என்றும் பிரதமர் கூறினார்.

நீண்ட காலமாக, ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தும் டீசல் எண்ணெய் கடத்தலைத் தடுக்க  வேண்டும்.  ஆனால் டீசல் எண்ணெய்க்கான மானியத்தை நிறுத்தினால், பல வட்டங்களை அது பாதிக்கும்.  ஆக, டீசல் தொடர்பாக ஏதேனும் மாற்றங்களைச் செய்தால்,அது  பொதுச் சேவைகள், ஃபெல்டா லாரிகள், மீனவர்கள், பள்ளிப் பேருந்துகள், அரசுத் துறைகள் போன்றவைகள் இந்த விலை உயர்வால்  பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய  அரசாங்கம் பாடுபடுகிறது ” என்றார்.

– பெர்னாமா


Pengarang :