NATIONAL

மளிகைக் கடையில் பெண்ணிடம் கொள்ளையிட்டதை ஆடவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்

கோத்தா பாரு, ஏப் 4- மளிகைக் கடையில் பெண் ஒருவரிடம்  கடந்த  மாதம்  கொள்ளையடித்த குற்றச்சாட்டை வேலையில்லாத ஆடவர் ஒருவர்  இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று  ஒப்புக்கொண்டார்.

நீதிபதி நிக் ஹப்ரி முன்னிலையில் தனக்கெதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது குற்றத்தை ஒப்புக் கொள்வதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரான  முகமது  பவசான் மாட் அலி  (வயது 31)  வாக்குமூலம் அளித்தார்.

கடந்த மார்ச் 15ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் பாஞ்சி,  கம்போங் பெலுகார், ஜாலான் ஹாஸ்பிட்டலில் உள்ள மளிகைக் கடையில் 48 வயதுடைய பெண்ணை பாராங்கத்தி முனையில் மடக்கி 1,000 வெள்ளியைக் கொள்ளையிட்டதாக  அவ்வாடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டத்தின் 392வது பிரிவு மற்றும்  அதே சட்டத்தின்  397 பிரிவின் கீழ் அவ்வாடவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  இச்சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்குக் கூடுதல் பட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படும்.

அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் அகமது ஃபைஸ் ஃபித்ரி முகமது வழக்கை நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.


Pengarang :