NATIONAL

வேக வரம்பை மீறி வாகனத்தைச் செலுத்திய 16,142 சம்பவங்கள் பதிவு

ஈப்போ, ஏப் 8: ஏப்ரல் 1 முதல் ஹரி ராயா ஐடில்பித்ரி 2024 கொண்டாட்டக் காலம் முழுவதும் சிறப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. அதாவது, தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு அமைப்பின் (AwAS)

 கேமராக்கள் மூலம் 16,142 வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டிய சம்பவங்களைச் சாலைப் போக்குவரத்துத் துறை கண்டறிந்துள்ளது.

மொத்தம் 95 சதவீதம் பேர் மணிக்கு 130 கிமீ முதல் 170 கிமீ வேகத்தில் வாகனத்தை செலுத்தினர். மேலும் ஐந்து சதவீதம் பேர் மணிக்கு 170 கிமீ க்கு மேல் வாகனம் ஓட்டியது கண்டறியப் பட்டது என சாலைப் போக்குவரத்து துறையின் மூத்த இயக்குனர் டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.

“சரியான வேக வரம்பை பின்பற்றுவதன் மூலம் ஓட்டுநர்கள் தங்களுக்கும் மற்ற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பிற்கும் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்.

“இதன் மூலம், பண்டிகைக் காலங்களில் விபத்துக்கள் மற்றும் தினசரி இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், ஏப்ரல் 1 முதல் 6 வரையிலான காலகட்டத்தில் மோட்டார் சைக்கிள் சிறப்பு நடவடிக்கையின் மூலம் (Ops Khas Motosikal) சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்கத் தவறிய பல்வேறு குற்றங்களுக்காக 26,313 நோட்டிஸ்களை அவரது தரப்பு வழங்கியதாக லோக்மேன் கூறினார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, தீவிர குற்றங்களுக்காக மொத்தம் 1,464 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

– பெர்னாமா


Pengarang :