NATIONAL

கோல குபு பாரு இடைத்தேர்தல்- ஏப்.27ஆம் தேதிக்கு முன் ஹராப்பான் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்

உலு சிலாங்கூர், ஏப் 15 – கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரின் பெயர் வேட்புமனுத் தாக்கல் தினமான ஏப்ரல் 27 ஆம் தேதிக்குச் சில தினங்கள்  முன்னதாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜசெக  சமர்ப்பித்த பெயர் பட்டியலின் அடிப்படையில் கூட்டணியின் மத்திய தலைமைத்துவம்  வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் என்று  சிலாங்கூர் மாநில  ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஏப்ரல் 27ஆம் தேதிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன் வேட்பாளர்  தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.

தற்போதைக்கு நாங்கள்  வேட்பாளரை  உறுதி செய்வது தொடர்பான மத்திய தலைமைத்துவத்தின் உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறோம். மேலும், ஜசெக  ஏற்கனவே பல  வேட்பாளர் பெயர்களை அனுப்பியுள்ளதாக நான் நம்புகிறேன் என்று  குறிப்பிட்டார்.

இங்குள்ள கோல குபு பாரு,  அம்பாங் பெச்சாவில் நேற்று நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இந்த நிகழ்வின் போது  பல உள்ளூர் தலைவர்களையும் சந்தித்த அமிருடின், வரும்  மே 11-ம் தேதி நடைபெறவுள்ள  இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஒற்றுமை  அரசு இயந்திரம் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

வரவிருக்கும் இடைத்தேர்தலில் கோல குபு பாருவை தக்கவைக்க  சரியான பாதையில் செல்கிறோம் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

கோல குபு பாரு தொகுதி  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  ஏப்ரல் 27ஆம் தேதியும் தொடக்கக் கட்ட வாக்களிப்பு மே 7ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே அண்மையில் தெரிவித்துள்ளார்.

ஜசெக பிரதிநிதியான லீ கீ ஹியோங் புற்று  நோய் காரணமாக  கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ,  கடந்த 2013 முதல்  மூன்று தவணைகளாக கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

கடந்த  2022 இல் நடைபெற்ற   நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் ஏழாவது இடைத் தேர்தல் இதுவாகும்.

கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 40,226 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 போலீஸ்காரர்கள், 238 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.


Pengarang :