NATIONAL

முகவர் அங்கீகாரம் இல்லாமல் வீடு விற்பனையில் ஈடுப்பட்டதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஏப் 22 – ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உரிமம் இல்லாமல் வீட்டை விற்றதாகத் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

சொத்துடைமை மதிப்பீட்டாளர்கள், சொத்துடைமை முகவர்கள் மற்றும் சொத்து மேலாளர்கள் வாரியத்தில் பதிவு பெறதவர்  ஒரு  சொத்தை விற்பனை செய்ததாகவும் உரிமம் பெற்ற மதிப்பீட்டாளர், சொத்துடைமை முகவர் அல்லது சொத்து மேலாளராக ஆள்மாறாட்டம் செய்ததாகவும் டான் காய் ஹோ (வயது 43) என்ற அந்த ஆடவர் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த  2019ஆம் ஆண்டு மே மாதம்  23ஆம் தேதி  வங்சா மாஜூவில் உள்ள மெனாரா எச்.எஸ்.சி.யில் இக் குற்றத்தைப் புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில்  கூறப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு (சட்டம் 242)  மதிப்பீட்டாளர்கள்,  சொத்துடைமை முகவர்கள் மற்றும் சொத்து மேலாளர்கள் சட்டத்தின்   30(1) (e) பிரிவின் கீழ் டான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்க படுவோருக்கு அதிகபட்சமாக 300,000  வெள்ளி அபராதம் அல்லது அதிக பட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். அத்தகைய குற்றத்தைத் தொடரும்  ஒவ்வொரு நாளுக்கும் மேலும் 1,000  வெள்ளி அபராதமும் விதிக்கப்படும்.

குற்றம் சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 4,000  வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி  வழங்கிய நீதிபதி ஹமிதா முகமது டெரில்,  வழக்கின் மறுவிசாரணையை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் முகமது முஹைரி முகமது நோ வழக்கை நடத்தும் வேளையில்  குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக வழக்கறிஞர் லீ பெக்கி ஆஜராகிறார்.

– பெர்னாமா


Pengarang :