NATIONAL

கடற்படை ஹெலிகாப்டர் விபத்து-  பிரதமர் அன்வார் அனுதாபம்

கோலாலம்பூர், ஏப் 23- இன்று காலை பேராக் மாநிலத்தின்  லுமுட்டில்  அரச மலேசிய கடற்படையின் (ஆர்.எம்.என்.) இரண்டு ஹெலிகாப்டர்கள் சம்பந்தப்பட்ட நெஞ்சை உலுக்கும்  விபத்தில் உயிரிழந்த ஆன்மாக்களுக்காக நாடு துக்கம் அனுசரிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த சோகச் சம்பவம்  மலேசிய ஆயுதப்படை  குடும்பங்களுக்கு ஆழமான தாக்கத்தையும்  நாட்டிற்குப் பெரும் இழப்பையும்  ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட அவர், இந்த இழப்பிலிருந்து மீள்வதற்கான சக்தியை அவர்களுக்கு  இறைவன் வழங்க தாம் பிரார்த்திப்பதாகச் சொன்னார்.

லுமுட்டில் உள்ள அரச மலேசிய கடற்படைத் (ஆர்.எம்.என்.) தளத்தில் இன்று காலை நிகழ்ந்த அந்த சம்பவத்தில் அரச மலேசிய கடற்படையின   10 உறுப்பினர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இன்று காலை 9.32 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கடல்சார் நடவடிக்கை ஹெலிகாப்டரில்  (HOM-AW139) இருந்த  ஏழு உறுப்பினர்கள் மற்றும்  ஆர்.எம்.என். ஃபென்னிக் குழுவின் 3 உறுப்பினர்கள் உட்பட   10 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய அரச மலேசிய கடற்படை விசாரணைக் குழுவை அமைக்கவுள்ளது.

அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் அரச மலேசிய கடற்படையின்  90வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கான ஒத்திகைப் பயிற்சியின் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.


Pengarang :