NATIONAL

இ.பி.எஃப். மூன்றாவது கணக்கு உறுப்பினர்களின்  விருப்பத் தேர்வாக அமையும்

கோலாலம்பூர், ஏப் 25 –பரவலாகப் பேசப்பட்டு வந்த  ஊழியர் சேம நிதி வாரியத்தின் (இ.பி.எஃப்.)  பிளெக்ஸிபெல் அக்காவுண்ட் (Flexible Account) என அழைக்கப்படும் நெகிழ்வு கணக்கு வாரியத்தின்  1 கோடியே 60 லட்சத்து 70 ஆயிரம் உறுப்பினர்களுக்கு விருப்பத்  தேர்வினை வழங்கும் என்று  என்று இ.பி.எஃப். தலைமைச் செயல் முறை  அதிகாரி அகமது  ஜூல்கர்னைன் ஓன் கூறினார்.

பிளக்சஸிபெல் அக்காவுண்ட் என்பது குறுகிய கால நிதித் தேவைகளுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும் ஒரு புதிய கணக்காகும். இந்தக் கணக்கில் உள்ள சேமிப்பை உறுப்பினர்களின் தேவைக்கேற்ப எந்த நேரத்திலும் மீட்கலாம்.

வரும் மே மாதம்  11ஆம் தேதி முதல் 55 வயதுக்குட்பட்ட அனைத்து இ.பி.எஃப். உறுப்பினர்களின் கணக்குகளும் ஒய்வுகால கணக்கு  (Akaun Persaraan), நல்வாழ்வு கணக்கு (Akaun Sejahtera)  மற்றும்  நெகிழ்வு கணக்கு (Akaun Fleksibel) என மூன்று கணக்குகளாக மறுசீரமைக்கப்படும் என்று இ.பி.எஃப். தெரிவித்துள்ளது.

உறுப்பினர்களின் கணக்கு 1 மற்றும் கணக்கு 2 இல் உள்ள சேமிப்பு  முறையே ஓய்வுகால கணக்கு மற்றும் நல்வாழ்வு கணக்கில் அப்படியே இருக்கும். நெகிழ்வு கணக்கு பூஜ்ஜிய இருப்புடன் தொடங்கும்.

55 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய உறுப்பினர்கள்
வரும் மே 11 மற்றும்   ஆகஸ்ட் 31க்கு இடையில் இரண்டாவது கணக்கிலுள்ள குறிப்பிட்டத் தொகையை நெகிழ்வு கணக்கிற்கு மாற்ற  அனுமதிக்கப்படுவார்கள்.

உறுப்பினர்கள் நிதியை நெகிழ்வு கணிக்கிற்கு மாற்ற விரும்பாவிட்டால் நல்வாழ்வு கணக்கிலுள்ளத் தொகை அப்படியே இருக்கும்  அந்த வாரியம் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த புதிய நடைமுறையின் கீழ் மொத்த சேமிப்புத் தொகையில் 75 விழுக்காடு ஓய்வு கால கணக்கிற்கும்  15  விழுக்காடு நல்வாழ்வு கண்க்கிற்கும் 10 விழுக்காடு நெகிழ்வு கணக்கிற்கும் மாற்றப்படும்.


Pengarang :